உண்ணாவிரதம்; புறக்கணிப்பு; வெளிநடப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆவேசம்

மணலி:சாலை பணி, அதிகாரி தாமதம், மின் பிரச்னை குறித்து ஆவேசமாக கேள்வி எழுப்பிய மக்கள், கோரிக்கை நிறைவேற்றாவிடில், உண்ணாவிரதம், வெளிநடப்பு, புறக்கணிப்பு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பு மற்றும் சாலையில் பாய் போட்டு உறங்கும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
மணலி மண்டலம், 21வது வார்டில், நான்காவது கிராம சபை கூட்டம், உதவி பொறியாளர் ரஞ்சித் தலைமையில் நடந்தது. இதில், அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ் சேகர், உதவி செயற்பொறியாளர் சுமித்ரா உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கிராம சபை கூட்டத்தில், வார்டுக்குட்பட்ட மக்கள் பங்கேற்று, தங்கள் பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
ஆரோக்கியராஜ், சீனிவாசன் தெரு, மணலி: எங்கள் தெருவில், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், ஆட்டோ கூட வர முடியாத அளவிற்கு உள்ளது. மின் தடை அதிகம் உள்ளது. யாரிடம் சொல்வது; இங்கு அதிகாரிகளும் வரவில்லை. போனை எடுப்பதும் கிடையாது.
தெருவிளக்குகள் கம்பங்கள் சரிந்து விட்டன. இது குறித்து மாநகராட்சி எண்ணிற்கு தகவல் தந்தால், சரிசெய்து விட்டதாக பொய் தகவல் தருகின்றனர். இதுவரை சரி செய்யவில்லை.
ஈ.வெ.ரா. பெரியார் தெருவில், கிணறு தோண்டி பல நாட்களாகியும், அதை சரிசெய்யவில்லை.
தெருநாய், மாடு முட்டி மக்களுக்கு காயம் ஏற்படுகிறது. கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், பாடசாலை தெருவில், பாய் போட்டு படுத்துறங்கி, போராட்டம் செய்வேன் என கூறியவர், அதிகாரிகள் பதில் திருப்திகரமாக இல்லை என, வெளிநடப்பு செய்தார்.
ரமேஷ், கிராம சபை தலைவர், மணலி: கிராம சபை கூட்டத்திற்கு மக்கள், காலை 9:30 மணிக்கு வந்து விட்டோம். அதிகாரிகள் முற்பகல் 11:00 மணிக்கு வருகின்றனர். எவ்விதத்தில் நியாயம். அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
நகராட்சியாக இருக்கும் போது, சாலை, குடிநீர் வசதிகளுடன், செல்வசெழிப்போடு இருந்தோம். தற்போது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, படாதபாடு படுகிறோம்.
21வது வார்டின் கட்டமைப்பை சீர்குலைத்து விட்டனர். நான்கரை ஆண்டுகளாக பணிகள் நடக்கின்றன. எதும் முடியவில்லை. நானும் மூன்று முறை கவுன்சிலராக இருந்துள்ளேன்.
இது போன்ற சீர்கேட்டை பார்க்க வில்லை. சாலைகளை பாதியில் விட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், அடுத்த கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பேன் ; நீதிமன்றத்தில் அதிகாரிகள் பதில் சொல்வது போல் ஆகி விடும்.
டி.ஏ.சண்முகம், மணலி - சேக்காடு பொது வியாபாரிகள் சங்கம்: மாநகராட்சியான பின், எந்த பணிகளும் நடக்கவில்லை. சாலை படுமோசமாக உள்ளது. பல ஆண்டுகளாக நடக்கும், ஈ.வெ.ரா. பெரியார் தெருவில், கிணறு அமைத்தல், சாலை போடும் பணிகளை, ஒரு மாதத்தில் முடிக்காவிடில், 600 பேரை திரட்டி, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
காமராஜர் சாலையில், அடிக்கடி பள்ளம் தோண்டி, பணிகள் நடக்கின்றன. இதனால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். மின்வாரியத்திற்கு போன் செய்தால் எடுப்பதில்லை.
ராஜேஷ்சேகர், 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: மூன்று ஆண்டுகளாக மண்டல குழு கூட்டத்தில், கோரிக்கைகள் வைத்து சலித்து விட்டேன். இம்முறை, வார்டில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடப்பதாக கூறி விட்டு, வந்து விட்டேன். சின்னசேக்காடில், இரு ஆண்டுகளில் பணிகள் முடிகின்றன.
இங்கு, ஆறு ஆண்டுகளாகியும் பணி முடியவில்லை. எதிர்க்கட்சி கவுன்சிலர் என்பதால், காழ்ப்புணர்ச்சியா என்று தெரியவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடிப்பது கிடையாது.
மேலும்
-
நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை
-
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை
-
நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்