பாக்., ராணுவம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து முப்படையினர் விளக்கம்

புதுடில்லி: 'பாகிஸ்தான் ராணுவத்தின் நவீன போர் விமானங்கள், இஸ்லாமாபாத் அருகே உள்ள முக்கிய ராணுவ தளங்கள் அழித்தொழிக்கப்பட்டதால், மிகப்பெரிய இழப்பை அந்நாடு சந்தித்துள்ளது' என, நம் முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து டில்லியில் செய்தியாளர்களுக்கு நம் முப்படை அதிகாரிகள் சார்பில் நேற்று விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்தி, துணை அட்மிரல் ஏ.என்.பிரமோத், மேஜர் ஜெனரல் சந்தீப் எஸ்.ஷர்தா ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
100 பயங்கரவாதிகள் பலி
அப்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கியதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
பாகிஸ்தானில், ஒன்பது பயங்கரவாத முகாம்களை பலவிதமான உளவு அமைப்புகளின் தகவல்களின்படி துல்லியமாக கண்டறிந்து அழித்தோம். இதில் பஹவல்பூர், முரிட்கே ஆகியவை முக்கியமானவை.
'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலில், 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ரவூப், முதாசீர் அஹமது உள்ளிட்டோர் முக்கியமான பயங்கரவாதிகள். லஷ்கர் - இ - தொய்பாவின் பயங்கரவாத முகாம் தகர்க்கப்பட்டது.
பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை கொல்வதற்காக மட்டுமே, மே 7 அதிகாலையில் இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், நாம் தாக்குதல் நடத்திய அன்றைய தினம் இரவிலேயே பொதுமக்கள் மற்றும் ராணுவ பகுதிகளை குறிவைத்து ஏராளமான ட்ரோன்களை பாக்., ஏவியது.
அவற்றை எஸ் -400 வான்வழி பாதுகாப்பு சாதனம் வாயிலாக வெற்றிகரமாக தடுத்தோம். மூன்று ட்ரோன்கள் மட்டும் தரையில் விழுந்தாலும் குறைவான சேதமே ஏற்பட்டது. நம் வான் பாதுகாப்பு கவச அமைப்பு பெரும்பாலான ட்ரோன்களை வானிலேயே வீழ்த்தியது.
இதையடுத்து, நாம் அளித்த பதிலடியில் லாகூர், குஜ்ரன்வாலா உள்ளிட்ட இடங்களில் ரேடார் மையங்கள் தகர்க்கப்பட்டன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள், பயங்கரவாதிகளை மட்டும் குறி வைத்தோம்.
ஆனால், அவர்கள், நம் மக்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்தனர். அதனால் தான் பதிலடி தரப்பட்டது.
அவர்களின் இந்த தொடர் தாக்குதலை நிறுத்த வேண்டுமானால், எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடிக்க முடிவு செய்யப்பட்டது.
மறைக்க முடியாது
விமானப்படை தளங்கள், கட்டளை மையங்கள், உள்கட்டமைப்புகளை தாக்கினோம். இனியும் வாலாட்டக்கூடாது என்ற நம் தெளிவான செய்தியை அவர்கள் புரிந்து கொண்டனர்.
பாகிஸ்தானின் பல உயர் தொழில்நுட்ப விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதை உறுதியாக சொல்கிறோம். எத்தனை விமானங்கள் என்ற மதிப்பீடு நடக்கிறது. இந்த உண்மைகளை பாகிஸ்தானால் நீண்ட நாள் மறைக்க முடியாது.
பாகிஸ்தானில், 11 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் நவீன போர் விமானங்கள், இஸ்லாமாபாத் அருகே உள்ள முக்கிய ராணுவ தளங்கள் அழித்தொழிக்கப்பட்டதால், மிகப்பெரிய இழப்பை அந்நாடு சந்தித்துள்ளது.
கராச்சி உட்பட பாக்.,கின் பல்வேறு பகுதிகளை துல்லியமாக தாக்கி அழிக்க நம் படையினர் தயாராக இருந்தனர். உத்தரவுக்காக அவர்கள் காத்திருந்தனர்.
இதனால், பாக்., கடற்படையினர் தங்கள் துறைமுகங்களையும், அதை சுற்றியுள்ள தரைப்பகுதிகளையும் தற்காத்துக் கொள்ள தயார் நிலையில் இருந்தனர். அதையும் நாம் கண்காணித்தோம்.
அதே நேரத்தில் எல்லையில் தரை வழியாக நடந்த தாக்குதல்களையும் நம் படையினர் முறியடித்தனர். எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில், 35 - 40 பாக்., வீரர்கள் உயிரிழந்தனர். நம் தரப்பில் ஐந்து வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் பாக்., தரப்பு, அதை மீறியதால், கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றோ, நாளையோ அல்லது அதன் பிறகோ, மீண்டும் மீண்டும் ஏதேனும் அத்துமீறல் நடந்தால், இந்தியாவின் பதில் மிக கடுமையாக இருக்கும் என மிகத் தெளிவாக, 'ஹாட்லைன்' வாயிலாக, பாக்., ராணுவ இயக்குனர் ஜெனரலுக்கு தெரிவித்து விட்டோம்.
எச்சரிக்ைக
மீண்டும் இன்னொரு அத்துமீறல் நடந்தால், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் அவரிடம் எச்சரிக்கப்பட்டது.
போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல் தான் முதலில் அழைப்பு விடுத்தார். நாம் ஒரு போர் சூழலில் உள்ளோம். இழப்புகள் குறித்து விவாதிக்க விரும்பவில்லை.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை, போர் நடவடிக்கைக்கு சற்றும் குறைந்தது இல்லை. தாக்குதல் நடத்திய நம் விமானிகள் பத்திரமாக வீடு திரும்பினர்.
நம் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி எப்படி இருக்கும் என்பது இப்போது பாகிஸ்தானுக்கு தெரிந்திருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும்
-
நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை
-
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை
-
நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்