ஓய்வு பெற்றார் விராத் கோலி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து

புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராத் கோலி.


இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி 36. களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் இவர், 2016-19 காலக்கட்டத்தில் ரன் மழை பொழிந்தார். சமீபத்திய போட்டிகளில் 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே வீசும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இவரது பலவீனம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அம்பலமானது. இதையடுத்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தார். வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது சேவை, அணிக்கு தேவை என இந்திய கிரிக்கெட் போர்டு கருதியது. இதனால், ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது.

இந்த சமயத்தில் டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். இவரது வழியில், தான் நேசித்த டெஸ்ட் போட்டியில் இருந்து கோலியும் நேற்று விடைபெற்றார். இது, இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.


பாடம் படித்தேன்: ஓய்வு குறித்து சமூகவலைளத்தில் கோலி வெளியிட்ட உருக்கமான பதிவு:
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் நீல நிற தொப்பியை முதன்முதலில் 2011ல் அணிந்தேன். 14 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இவ்வளவு காலம் எனது பயணம் நீடிக்கும் என கற்பனை கூட செய்தது இல்லை. இது என்னை சோதித்தது, செதுக்கியது, வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக் கொடுத்தது. வெள்ளை உடையில் விளையாடுவது தனிப்பட்ட முறையில் ஆழமான உணர்வை தரும். நீண்ட நாள் ஆட்டம், அதில் யாரும் பார்க்காத சில தருணங்கள் அற்புதமானவை. இவை என்றும் மனதில் நிலைத்திருக்கும்.


புன்னகை அனுபவம்: டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவது எளிதானதல்ல. ஆனால் இது சரியான நேரம் என உணர்கிறேன். இப்போட்டிக்காக அனைத்தையும் கொடுத்துள்ளேன். அதுவும், எதிர்பார்த்ததைவிட எனக்கு அதிகம் திரும்ப கொடுத்துள்ளது.
டெஸ்ட் அரங்கில் என்னுடன் களத்தை பகிர்ந்து கொண்டவர்கள் உட்பட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி தெரிவித்து, விடைபெறுகிறேன். எனது டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் ஒரு புன்னகையுடன் திரும்பி பார்ப்பேன்.

இவ்வாறு கோலி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் கோலி. இனி இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் இவரது ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்கலாம். 2027, உலக கோப்பை தொடர் வரை நீடிக்கலாம்.
'269' ரகசியம் என்ன

இந்திய டெஸ்ட் அணியில் 269வது வீரராக, 2011ல் கோலி (எதிர், வெஸ்ட் இண்டீஸ்) அறிமுகமானார். இந்த எண் கொண்ட தொப்பி வழங்கப்பட்டது. இதை உணர்த்தும் விதமாக, ஓய்வு குறித்த தனது பதிவின் முடிவில், 'விடைபெறுகிறது 269' என கோலி குறிப்பிட்டிருந்தார். இது சமூகவலைதளங்களில் 'டிரணெ்ட்' ஆனது.


'பயோ-டேட்டா'
பெயர்: விராத் கோலி
பிறந்த நாள்: 05-11-1988
பிறந்த இடம்: டில்லி
'ரோல்': 'டாப்-ஆர்டர் பேட்டர்'
பேட்டிங் ஸ்டைல்: வலது கை
மொத்த டெஸ்ட்: 123
ரன்: 9230
சதம்: 30
அரைசதம்: 31
அதிகபட்ச ரன்: 254* (எதிர்: தெ.ஆப்., 2019, புனே)
சிக்சர்: 30
பவுண்டரி: 1027
சராசரி: 46.85
'ஸ்டிரைக் ரேட்': 55.57

Advertisement