கும்பகோணம் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ரூ.5 லட்சம் அபராதம் கலெக்டருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள குளங்கள் மற்றும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற, நான்கு மாதம் கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம், தவறினால் கும்பகோணம் மாநகராட்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கோவில் குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை அகற்றும்படியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ஜி.ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 44 குளங்கள் மற்றும், 11 கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, 2018ல் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, வழக்கறிஞர் யானை ஜி.ராஜேந்திரன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், அப்துல் குத்துாஸ் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி டி.ஆர்.செந்தில்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
மொத்தம் உள்ள, 44 குளங்களில், ஏழு குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் மட்டுமே முழுமையாக அகற்றி மீட்கப்பட்டுள்ளன. மூன்று குளங்களில் மரங்கள் உள்ளன; நான்கு குளங்கள் தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு உள்ளது. மீதமுள்ள, 26 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நீர்வளத்துறை அதிகாரிகள், நான்கு மாதங்களில் அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை, 15 நாட்களுக்கு ஒருமுறை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பார்வையிட்டு, அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நீர்வளத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், கும்பகோணம் மாநகராட்சி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தலா, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வருவாய் துறை வரைபடத்தில் உள்ளபடி பராமரிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை கண்டறிய, மாவட்ட நீதிபதிக்கு போதுமான பணியாளர்களை, மாவட்ட கலெக்டர் நியமிக்க வேண்டும்.
குறித்த காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கும்படி, மாவட்ட நீதிபதி விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
நீதிமன்ற அனுமதியின்றி குளங்கள், வாய்க்கால்களில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. பொற்றாமரை குளத்தின் வரத்துக் கால்வாய்களை, மாவட்ட நிர்வாகம், கும்பகோணம் மாநகராட்சி கண்டறிந்து அவற்றை மீட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
-
போலீஸ் செய்திகள்...