அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தன போக்கால் தர்மபுரியில் கரும்பு விவசாயம் அழியும் அபாயம்

தர்மபுரி :தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தன போக்கால், தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால், கரும்பு

விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை, அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை என, இரண்டு சர்க்கரை ஆலைகள் உள்ளன. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1969ல் நிறுவப்பட்டது. இங்கு, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த கரும்பாலைக்கு பாலக்கோட்டை சுற்றியுள்ள மல்லாபுரம், பெல்ராம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, சாமனுார் போன்ற பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள், விளைவித்த கரும்பை பதிவு செய்து ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த ஜன., 29ல் கரும்பு அரவை தொடங்கப்பட்டது. நாளொன்றுக்கு, 1,200 டன் கரும்பு தேவைப்பட்ட நிலையில், 600 டன் கரும்பு
மட்டுமே வரத்தானது.
கரும்பு நாற்று, சொட்டுநீர் பாசனத்திற்கு முக்கியத்துவம் குறித்து நேரடியாக விவசாயிகளை சந்தித்து ஊக்கப்படுத்தினால், மட்டுமே கரும்பு சாகுபடி அதிகரிக்கும். இல்லையெனில், தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி என்பது பெருமளவில் குறையும் என, விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், பயிர் காப்பீடு செய்வதில் விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டாததால், கடந்தாண்டு கரும்புக்கு ஒரு விவசாயி மட்டுமே பயிர் காப்பீடு செய்துள்ளார். மரவள்ளிக்கு அதுவும் இல்லை.

* இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி கூறுகையில், ''கடந்தாண்டு கரும்பு அரவையின் போது, டன்னுக்கு, 2,850 ரூபாய் மட்டுமே வழங்கியதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், கரும்புக்கு இன்சூரன்ஸ் என்பது பயனில்லாத ஒன்று. ஏனெனில், ஏக்கருக்கு, 2,500 ரூபாய் பிரீமியம் செலுத்தி இன்சூரன்ஸ் செய்யும் விவசாயிக்கு, கரும்பு பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு வழங்குவதில்லை. மாறாக ஒரு பிர்கா அளவில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு என்ற நடைமுறையால், விவசாயிகள் கரும்புக்கு இன்சூரன்ஸ் செய்வதை தவிர்த்து வருகின்றனர். கரும்பு விவசாயத்தை விட்டும் விவசாயிகள் வெளியேறி வருகின்றனர்,'' என்றார்.



* மோளையானுாரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், ''தர்மபுரி மாவட்டத்தில் விளையும் கரும்புக்கு பிழி திறன் அதிகம். இதனால், டன் ஒன்றுக்கு, 10.40 பாயின்ட் அளவிற்கு கரும்பின் பிழி திறன் உள்ளது. தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனபோக்கால், விவசாயிகள் கரும்பு சாகுபடி பரப்பை குறைத்து வருகின்றனர். 10,000 ஹெக்டேருக்கு மேலிருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 4,500 ஹெக்டேராக சுருங்கியுள்ளது. மேலும், புதிய கரும்பு ரகங்கள் தர்மபுரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தவில்லை. இன்சூரன்ஸ் நடைமுறையில் மாற்றம், வெட்டு கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தர்மபுரி மாவட்டத்தில், கரும்பு விவசாயம் தொடர்ந்து நடக்கும். இல்லையெனில், முற்றிலும் அழிந்து விடும்,'' என்றார்.

Advertisement