'சர்வர்' வேகம் குறைவால் ரேஷன் கடைகள் திணறல்

3

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், 'சர்வர்' பிரச்னையால், 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும், விற்பனை முனைய கருவி வேகமாக செயல்படாததால், ஒரு மணி நேரத்தில், ஐந்து கார்டுதாரர்களுக்கு கூட பொருட்கள் வழங்க முடியவில்லை.

இதனால், கடை ஊழியர்களும், கார்டு தாரர்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தொடர்கதையாகி வரும் இந்த பிரச்னையில், உயரதிகாரிகள் கவனம் செலுத்தி தீர்வு காண, ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:

தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில், பி.ஓ.எஸ்., கருவிகள் வேகமாக வேலை செய்வதில்லை. தொழில்நுட்ப கோளாறுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

விரல் ரேகையை, 'ஸ்கேன்' செய்வதற்கு அதிக நேரமாகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 20 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், கருவியின் வேகம் குறைவால் தற்போது, ஐந்து பேருக்கு கூட வழங்க முடியாவில்லை.

இதனால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்கள், ஊழியர்கள் மீது தங்களின் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இதற்கு அரசு தீர்வு காண, வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement