வெளியுறவு செயலர் மீது விமர்சனம்; தலைவர்கள், அதிகாரிகள் கண்டனம்

2

புதுடில்லி : பாக்., உடன் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியை சமூக வலைதளங்களில் வரம்பு மீறி விமர்சிப்பதற்கு, அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா - பாக்., இடையே கடந்த 10ல் திடீரென போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது.

மோசமான கருத்து



நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, மிஸ்ரிக்கு எதிராக சமூக வலைதளங்களில், 'ட்ரோல்' எனப்படும் கிண்டலான விமர்சனங்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு சிலர் வரம்புகளை மீறி மிஸ்ரி, அவரது மகள் மற்றும் குடும்பத்தினரையும் குறிப்பிட்டு மிக மோசமான கருத்துகளை தெரிவித்தனர்.

விக்ரம் மிஸ்ரியின் மகள், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள தனியார் சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிறுவனம், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு சட்ட உதவி அளித்து வருகிறது. இதை குறிப்பிட்டு பலரும், அவரை விமர்சித்து வருகின்றனர்.

விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான விமர்சனங்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ், ''முடிவுகளை எடுப்பது தனிப்பட்ட அதிகாரிகள் அல்ல; அரசுதான். ஆனால், அதிகாரிகளுக்கு எதிராக சில சமூக விரோதிகள் வெளிப்படையாகவே அவதுாறு பேசுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார்.

ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, ''மிக நேர்மையான, கண்ணியமான அதிகாரியான விக்ரம் மிஸ்ரி, நம் தேசத்துக்காக அயராது உழைக்கிறார்.

''நம் அதிகாரிகள் உட்பட அரசு ஊழியர்கள் அனைவருமே அரசு நிர்வாகத்தின் கீழ் பணிபுரிகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

அபத்தமானது



காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர், ''இளம் அதிகாரியான விக்ரம் மிஸ்ரி, இதைவிட மிகச் சிறப்பாக என்ன செய்ய முடியும் என நினைக்கின்றனர். அவர் மீதான விமர்சனம் மிகவும் அபத்தமானது,'' என்றார்.

நம் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர் நிருபமா ராவ், ''போர் நிறுத்தத்துக்கு விக்ரம் மிஸ்ரியையும் அவரது குடும்பத்தினரையும் கிண்டல் செய்வது, மிகவும் வெட்கக்கேடானது.

''அவரது மகள், குடும்பத்தினர் மீதான நச்சு வெறுப்புகள் நிறுத்தப்பட வேண்டும். அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் விக்ரம் மிஸ்ரியுடன் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

இதுபோல, தேசிய மகளிர் கமிஷன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கம், இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டவையும் விக்ரம் மிஸ்ரி மீதான விமர்சனங்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளன.

Advertisement