பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்

6


சண்டிகர்: பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜித்தா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பராப்ஜீத் சிங் என்ற நபர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.




இது குறித்து அமிர்தசரஸ் துணை கமிஷனர் சாக்ஷி சாவ்னி கூறியதாவது: மது அருந்தியவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்றிரவு எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து டாக்டர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். அப்போது 6 பேர் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.


அவர்களை மீட்டு வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். மருத்துவக் குழுக்கள் இன்னும் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறது. மக்களுக்கு சில அறிகுறிகள் இருந்தாலும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 14 பேர் இறந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளோம், மேலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement