ஆந்திராவில் ரிநியூ பவர் ரூ.22,000 கோடி முதலீடு

புதுடில்லி : 'ரிநியூ பவர்' நிறுவனம், ஆந்திராவில், 22,000 கோடி ரூபாய் மதிப்பில், இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளாகத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, வரும் 16ம் தேதி ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நர லோகேஷ் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஆந்திர மாநிலம் அனந்தபூர் நகரத்தில், 1,800 மெகா வாட் திறன் கொண்ட சூரிய எரிசக்தி ஆலையும்; 1,000 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி சேமிப்பு வசதியும் அமைக்கப்பட உள்ளன. இவை தவிர, 100 கிலோ மீட்டர் தொலைவிலான கூடுதல் உயர் மின்னழுத்த இணைப்பையும் ரிநியூ பவர் அமைக்க உள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கைகளால், கடந்த 2019ல், ஆந்திராவில் இருந்து வெளியேறிய ரிநியூ பவர், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அம்மாநிலத்தில் முதலீடு செய்ய உள்ளது.

Advertisement