திருக்காஞ்சியில் கட்டப்பட்டு வரும் சிவன் கோவிலுக்கு காசியில் இருந்து வந்த 108 பான லிங்கத்திற்கு வரவேற்பு

புதுச்சேரி : திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில், கட்டப்பட்டு வரும், சிவன் கோவிலுக்கு, காசியில் இருந்து வந்த 108 பானலிங்கத்திற்கு, முதல்வர் ரங்கசாமி, மலர் துாவி பூர்ண வரவேற்பு அளித்தார்.
திருக்காஞ்சியில் வரலாற்று சிறப்பு மிக்க கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. அந்த பகுதியில், 20 கோடி மதிப்பீட்டில், 108 அடி உயரம் கொண்ட , சதாசிவர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
அந்த கோவிலில் அமைப்பதற்கு, காசியில் இருந்து உளி படாத, 108 பானலிங்கங்கள், விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த பானலிங்கங்கள் கோரிமேடு எல்லையில், நேற்று வந்தது. சிவனடியார்கள், திருவாகசம் படித்து, ஓம் சிவாய நம என்ற சிவ ஒலி எழுப்பினர். தொடர்ந்து, லிங்கத்தின் முன்பு, வேலுாரை சேர்ந்த சித்தர் பழனி தலைகீழாக நின்று யோகசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து, அமைச்சர், தேனீ ஜெயக்குமார் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி, 108 பான லிங்கங்களுக்கு, மலர்துாவி, பூர்ண கும்ப மரியாதை செலுத்தி மாலை 5:30 மணியவில், வரவேற்பு அளித்தார். பின்னர், தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், திருவண்ணாமலை நால்வர் மடத்தில் இருந்து யோகா பயிற்சியாளர் கஜேந்திர சுவாமிகள் உட்பட சிவன் அடியார் கூட்டம், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து, வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட 108 பானலிங்கங்கள், ஊர்வலமாக, ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக, திருக்காஞ்சிக்கு சென்றது.