3 மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் 16 அடி சரிவு! சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

சென்னை: சென்னையில் மூன்று மாதங்களில், மாதவரம், அம்பத்துார் மண்டலங்களில், 16 அடி வரையும், மீதமுள்ள மண்டலங்களில், 3 முதல் 10 அடி வரையும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது. வெயில் கொளுத்துவதால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்து, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை மாநகராட்சியின் நிலத்தடி நீர்மட்டம்,ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும். அதற்காக, 200 மாநகராட்சிகளிலும் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
20 செ.மீ., மழை:
இவற்றின் வாயிலாக,நிலத்தடி நீர்மட்ட அளவை அறிந்து கொள்வதோடு, மாநகராட்சியும்,குடிநீர் வாரியமும் இணைந்து, நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. சென்னையில் ஜூன் மாதத்தில் வழக்கமாக, 6.6 செ.மீ., மழை பெய்யும். ஆனால், 2024 ஜூனில், 200 சதவீதம் அதிகரித்து, 20 செ.மீ., மழை பெய்தது. செப்., 30ம் தேதி வரை வழக்கத்தைவிட அதிக நாட்கள் மிதமான மழை பொழிவாக இருந்தது.
இதனால், மற்ற ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடந்தாண்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. தவிர, மிதமான மழை அதிக நாள் பெய்ததால், போதிய அளவு நீர் பூமிக்குள் இறங்கியது. இதன்படி, கடந்தாண்டு ஆக., முதல் டிச., வரை, சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் படிப்படியாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
வெயில் தாக்கம்:
நடப்பாண்டு ஜனவரியில் குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைய துவங்கியது. பிப்ரவரி கடைசியில் இருந்து வெயிலின் தாக்கம்அதிகரித்து வருவதால், குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. வீடு, வணிக நிறுவனங்கள் உபயோகத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ள. இதனால், மோட்டார் வைத்து அதிகம் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
அந்த வகையில், ஏப்ரலில் மாதவரம், அம்பத்துார் ஆகிய மண்டலங்களில், 13 - 16 அடி வரை குறைந்து, நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. மற்ற மண்டலங்களில், 3 முதல் 10 அடி வரை நீர் மட்டம் குறைந்துள்ளது. வட சென்னையைவிட, மத்திய சென்னை, தென்சென்னையில் ஓரளவு நிலத்தடி நீர் உள்ளது. வெயிலின் தாக்கம் தொடர்வதால், இந்த மாதம் மேலும், 7 அடி வரை நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், சென்னை, மாநகராட்சி விரிவாக்க பகுதிகளிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏரிகள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர், சென்னைக்கு தினமும் வினியோகிக்கப்படுகிறது. வழக்கமாக, 100 கோடி லிட்டர் வினியோகம் செய்யப்படும். தற்போது கோடை காலம் என்பதால், 107 கோடி லிட்டர் வரை வினியோகம் செய்யப்படுகிறது.
இதில், 97 கோடி லிட்டர், குழாய் இணைப்பு வழியாகவும், 20 கோடி லிட்டர், 450 லாரிகள் வாயிலாகவும் வழங்கப்படுகிறது. தவிர பல வீடுகள், வணிக நிறுவனங்கள், ஆழ்துளை கிணறு வாயிலாக, நிலத்தடி நீர் உறிஞ்சு பயன்படுத்துகின்றன.
பருவமழை
சென்னையின் விரிவாக்க பகுதிகளில், குடிநீர் திட்டம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வராததால், அங்குள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வாயிலாக நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இதனால், தனியார் லாரி குடிநீர் பயன்பாடு அதிகரித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால், கோடையில் அடிக்கடி மழை பெய்கிறது.இதனால், பூமியில் ஈரப்பதம் இருக்கும். நிலத்தடிநீர் மட்டம் மேலும் குறைய வாய்ப்பில்லை. ஏரி, கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கைகொடுப்பதால், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை வராது. தென்மேற்கு பருவமழை கைகொடுத்தால் சென்னையில், நிலத்தடிநீர் மட்டம் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி, மணல், களிமண், பாறை அடுக்குகளை உடைய நிலப்பரப்பு. அதற்கேற்ப மழைநீரை நிலத்தடியில் தேக்கினால்தான் நீர்மட்டம் உயரும். ஏரி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, இருக்கும் நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததால் நிலத்தடி நீரை தேக்க முடியாத நிலை உள்ளது.சென்னையை பொறுத்தமட்டில் வடகிழக்கு பருவமழை ஒரே நாளில் அதிக அளவு கொட்டி தீர்க்கும்.
மூன்று மாதம் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்வதால் வெள்ளமாக மாறி, பூமிக்குள் இறங்காமல் வீணாக கடலில் சேர்கிறது.நிலத்திற்கடியில் மழைநீர் இறங்காதபடி, சிமென்ட் கலவையால் அமைக்கப்படும் வடிகால்வாய்கள், நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளால்தான் நிலத்தடிநீர் போதிய அளவு பூமிக்குள் தங்குவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.




மேலும்
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்