பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!

32

சென்னை: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:


@1brமுதல்வர் ஸ்டாலின்

பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்.

அமைச்சர், தங்கம் தென்னரசு

பாலியல் வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்து உரிய தண்டனையும் பெற்றுத் தந்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பொதுச்சமூகம் மன்னிக்காது.

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

பா.ம.க., செயல் தலைவர், அன்புமணி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும்வரை சிறை வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

த.வெ.க., தலைவர் விஜய்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது.பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக
இருக்க வேண்டும்.

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர், செல்வ பெருந்தகை

அரசியல்வாதிகளால் தாங்கள் காப்பற்றப்படுவோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது நீதிமன்றத்தித்தின் இந்த தீர்ப்பு.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும்.

வி.சி.க., தலைவர், திருமாவளவன்

காயத்திற்கு இடப்படும் மாமருந்தாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு உள்ளது. இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறக் கூடாது என்பது இந்த தீர்ப்பு உதவும்.

தி.மு.க., எம்.பி., கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற கடுமையான தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் வெளிவராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள தேவையில்லை.

அ.தி.மு.க., வரவேற்பு

அ.தி.மு.க., கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

2026 இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார் என்ற கேள்விக்க்கான பதிலும், உரிய நீதியும் நிச்சயம் கிடைக்கும். அன்று திமுக தலைகுனிந்து நிற்கும். தி.மு.க., எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்.

அ.ம.மு.க., பொதுச்செயலாளர், தினகரன்

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.

தே.மு.தி.க., பொதுச்செயலாளர், பிரேமலதா

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
இனி வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்க கூடாது என்பதற்கு தீர்ப்பு சான்று ஆகும்.

Advertisement