கல்வராயன்மலையில் கோடை விழா நடத்தப்படுமா? கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் மீது மக்கள் அதிருப்தி
மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக இருந்த கோடை விழா, நடத்தாமல் கைவிடப்பட்டு இருப்பது ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் மேற்கு எல்லை பகுதியில், 3000 அடி உயரத்துடன் இயற்கை எழிலுடன் உள்ள கல்வராயன்மலை கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் பரவி காணப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் 15 ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேகம், பெரியார், கவியம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள், படகு சவாரி, பூங்கா ஆகியவை இருப்பதால் சுற்றுலா தலமாகவும் உள்ளது.
அங்குள்ள மக்கள் விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, விறகு வெட்டுதல், தேன் மற்றும் கடுக்காய் சேகரித்தல் உள்ளிட்ட தொழில்களை செய்கின்றனர்.
இருப்பினும் போதிய வருமானம் இன்மையால், பெரும்பாலான மலைவாழ் மக்களை வெளிமாநிலத்திற்கு எஸ்டேட் வேலை, செங்கல் சூளை பணிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பதையும், அவர்களின் அறியாமையை பயன்படுத்தி செம்மரம் வெட்டுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இதற்கிடையே தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் 2 நாட்கள் வெகுவிமர்சையாக கோடை விழா நடத்துவது வழக்கம். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு துறைகளின் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். எவ்வித அலைச்சலுமின்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைத்து வந்ததால் மிகுந்த மகிழ்ச்சியடைவர்.
கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அரசு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த பல்துறை கண்காட்சி அரங்குகள் அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
வனத்துறை, சுற்றுலா துறை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்பர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கண்டுகளிப்பர். அதிகளவிலான பொதுமக்கள் வருகையால் மலை பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சி, பூங்கா, படகு சவாரி இடங்கள் மேம்படுத்தப்படும். ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக ஒவ்வொறு ஆண்டும் கோடை விழா கருதப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு கோடை விழா நடத்த முடியாமல் போனது. அதன்பின் நிலமை சீரான பிறகு மீண்டும் கோடை விழாவை நடத்த ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.
தி.மு.க., ஆட்சியிலாவது கோடை விழா நடத்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக இருந்த கோடை விழா தற்போது முற்றிலும் கைவிடப்பட்டு இருப்பதால் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை