புழல் சிறையில் கஞ்சா, போதை சாக்லேட் 'சப்ளை'; ரவுடிகளுடன் கைகோர்த்த அதிகாரிகளால் ஆபத்து

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு, கஞ்சா, போதை சாக்லேட், சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களின் 'சப்ளை' அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் புழல் சிறைக்குள் இரண்டு பொட்டலங்களில் வீசப்பட்ட போதை மாத்திரைகள், போதை சாக்லேட், கஞ்சா, மொபைல் போன் உள்ளிட்டவற்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர். ரவுடிகளுடன் சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கைகோர்த்து செயல்படுவதே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை அருகே புழலில், 220 ஏக்கர் பரப்பில், மூன்றடுக்கு பாதுகாப்பில், புழல் ஒன்று, புழல் இரண்டு என, இரண்டு தொகுப்புகளாக மத்திய சிறை வளாகம் செயல்படுகிறது. இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், மகளிர் கைதிகள் என, 3,000 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. சராசரியாக எப்போதும், 2,500 கைதிகளாவது இச்சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பர்.
பொட்டலங்கள்
அவர்களில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், பா.ஜ., பிரமுகர்கள் மற்றும் ஹிந்து தலைவர்களை குறி வைத்து கொலை செய்த பயங்கரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டு உள்ளனர். கொடூர குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள், கூலிப்படையினர், சைபர் குற்றவாளிகள், நில அபகரிப்பு, ஆள் கடத்தல் குற்ற வழக்கில் கைதானவர்களும் உள்ளனர்.
கைதிகளிடம், சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள், மொபைல் போன்களும் புழக்கத்தில் உள்ளன. நேற்று முன்தினம் புழல் மத்திய சிறை இரண்டில், சுற்றுச்சுவருக்கு வெளியே கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இரண்டு பொட்டலங்களை கைப்பற்றியதாக, புழல் காவல்நிலையத்தில், சிறைத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.
புகாரில் கூறியிருப்பதாவது: புழல் மத்திய சிறை இரண்டின் நுழைவாயிலுக்கும், சிறைக்காவலர் குடியிருப்புக்கு செல்லும் வழிக்கும் இடைப்பட்ட பகுதியில், 30 அடி உயர சுற்றுச்சுவர் உள்ளது. அதன் வெளிப்புறத்தில், ஜி.என்.டி., சாலையில் இருந்து வீசப்பட்ட கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இரண்டு பொட்டலங்கள் சிறைக்குள் உள்ளே விழாமல், சுற்றுச்சுவரில் பட்டு வெளியே விழுந்து கிடந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர் பூவரசன், இரண்டு பொட்டலங்களையும் பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மொபைல்போன் புழக்கம்
அவர்களின் உத்தரவின்படி பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
கருப்பு நிறப் பொட்டலத்தில், போதை மாத்திரை - 30, கஞ்சா - 75 கிராம், சிகரெட் லைட்டர் - 2, பில்டர் சிகரெட் - 20, சிகரெட் - 10, பீடி - 6 கட்டு, போதை சாக்லேட் சிறியது - 2, போதை சாக்லேட் பெரியது - 2, மொபைல் போன் - 1; சிம் - 1, ஓ.சி.பி., எனப்படும் போதை பேப்பர் - 2 உள்ளிட்ட, 11 பொருட்கள் இருந்தன.
மஞ்சள் நிற பொட்டலத்தில், போதை மாத்திரை - 20, கஞ்சா - 60 கிராம், சிகரெட் லைட்டர் - 1, சிகரெட் - 10, பீடி - 5 கட்டு, போதை சாக்லேட்- 2 உள்ளிட்ட ஏழு பொருட்கள் இருந்தன.
இவற்றை வீசிய நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புழல் சிறையில் போதை வஸ்துகள் அதிகரிப்பு குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத காவலர்கள் கூறியதாவது: கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் சப்ளை செய்ததற்காக, ஐந்து ஆண்டுகளில் சிக்கிய மூன்று சிறைக்காவலர்களும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ஆனாலும், கைதிகளுக்கு, போதை பொருட்கள் மற்றும் மொபைல்போன்கள் புழக்கம் குறைந்தபாடில்லை.
கைதியாக அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளுடன் சிறை அதிகாரிகள், காவலர்கள் கூட்டு சேர்ந்து செயல்படுவதால் இந்த நிலை நீடிக்கிறது. உளவு போலீசார் வாயிலாக தீவிரமாக கண்காணித்து, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் சாட்டையை சுழற்றினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
மேலும்
-
பல லட்சம் கோடி முதலீடு திரட்ட அமெரிக்க அதிபர் சவுதியில் முகாம்
-
ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்... முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்
-
ராணுவ கிடங்கில் குண்டு வெடிப்பு; இந்தோனேஷியாவில் 13 பேர் பலி
-
எந்த பதவியையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி
-
ஆயில் கிடங்கில் தீ: ரூ.30 கோடி எண்ணெய் நாசம்
-
தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த விளக்க பிரசாரம்