பிரதமர் கவுரவ நிதி திட்ட முகாம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

நாமக்கல் :நாமக்கல், மோகனுார் வட்டார விவசாயிகள், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்கலாம் என, வேளாண் உதவி இயக்குனர்கள் மோகன், ஹேமலதா தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை: பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன் பெற தகுதியுடைய விவசாயிகள், 20வது தவணை தொகை, 2,000 ரூபாய் -பெறுவதற்கான விண்ணப்பங்களை சரி செய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில், வரும், 31 வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இத்திட்டத்தில், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும், எவ்வித விடுபாடுமின்றி பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில், வரும், 31 வரை நடக்கிறது.

நில உடமை பதிவேற்றம் மற்றும்

இ.கே.ஒய்.சி., பதிவேற்றம் செய்யாத விவசாயிகள், சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தையோ, பொது சேவை மையத்தையோ அணுகலாம். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், சம்பந்தப்பட்ட வங்கிகளையோ அல்லது அஞ்சல் அலுவலகங்களில் புதிதாக வங்கி கணக்கு துவங்கியோ பயன் பெறலாம். நில உடமை பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே, வரும், 20வது தவணை தொகை விடுவிக்கப்படும். அதனால், தாமதிக்காமல் நில உடமை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும், இத்திட்டத்தில் பயனாளி இறந்து விட்டால், அவரது ஆதார் எண், இறப்பு சான்றிதழை சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சமர்ப்பித்து, நிதியை நிறுத்தம் செய்ய வேண்டும். இத்திட்டத்தில் தகுதியுடைய, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், ஆதார் எண், நில விபரம், வங்கி கணக்கு விபரம் ஆகியவற்றை பயன்படுத்தி, பி.எம்., கிசான் வலைதளத்தில், தாங்களாகவோ அல்லது பொது சேவை மையத்தை அணுகியோ பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement