துறை தேர்வுகளை முடிக்கவில்லை என நீக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் பணி
சென்னை:பயிற்சி காலத்தில் துறை தேர்வுகளை முடிக்கவில்லை என கூறி, பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம். மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பணிபுரிந்த இவர், கடந்த, 2000ல் இறந்தார்.
கருணை அடிப்படையில், சிங்காரத்தின் மகள் சுஜாதாவுக்கு, 2007ம் ஆண்டு நவ., 22ல் வரைவாளர் பணி வழங்கப்பட்டது. பின், 2013ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பயிற்சி காலத்தில் துறை தேர்வுகளை முடிக்கவில்லை என கூறி, 2015ல், சுஜாதாவை பணிநீக்கம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுஜாதா தொடர்ந்த வழக்கை, 2022ல் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, சுஜாதா மேல்முறையீடு செய்தார். 'தந்தை இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின், கருணை அடிப்படையில் இந்த பணி கிடைத்தது.
'பயிற்சி காலத்தில் அனைத்து துறை தேர்வுகளை முடித்தும், பணிநீக்கம் செய்தது ஏற்புடையதல்ல' என, மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சுசில் ராஜ்குமார் ஆஜராகி, ''கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு எதிராக, பணி விதிமுறைகள்படி கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
''தனி நீதிபதியின் உத்தரவு என்பது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது,'' என்றார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், 'ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் மனுதாரரை மீண்டும் நியமிக்க வேண்டும். பணிநீக்க காலத்திற்கான ஊதியம் கோர முடியாது.
'அவரின் பதவி உயர்வு, ஓய்வூதிய பலன்கள் மற்றும் இதர பலன்களின் தொடர்ச்சி இருக்கும். தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டனர்.
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!