வீட்டில் இருந்தபடி வேலை மோசடி செய்த 12 பேர் கைது

ஆடுகோடி: வீட்டில் இருந்தபடி வேலை ஏற்பாடு செய்வதாக நம்ப வைத்து, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, ஆடுகோடி போலீஸ் வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரின் எல்.ஆர்.நகரில் வசிக்கும் நபர் ஒருவரின் மொபைல் எண்ணுக்கு, கடந்த மாதம் மெசேஜ் ஒன்று வந்தது. அதில் வீட்டில் இருந்தபடி வேலை உள்ளது. இந்த வேலையை முடித்துக் கொடுத்தால், கமிஷன் வழங்குவதாக கூறப்பட்டிருந்தது.

அதை நம்பிய அந்நபர், மெசேஜில் கூறியிருந்த வேலையை செய்து முடித்தார். அவரது கணக்குக்கு 800 ரூபாய் வந்தது. மீதத் தொகை கிடைக்க, 10,000 ரூபாய் செலுத்தினால் இரட்டிப்பாக கிடைக்கும் என, மெசேஜ் வந்தது. அதன்படி அவர் 10,000 ரூபாய் அனுப்பினார். 20,000 ரூபாயாக திரும்பி வந்தது.

இதே போன்று, இரட்டிப்பு பணம் செலுத்தி, அந்நபரின் நம்பிக்கையை பெற்றனர். 'உங்கள் கணக்குக்கு 10,83,502 ரூபாய் அனுப்புகிறோம். இதற்காக நீங்கள் 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றனர்.

இதை நம்பிய அவர், பணம் பரிமாற்றம் செய்தார். ஆனால் 10 லட்சம் வரவில்லை.

மாறாக கூடுதலாக 3.24 லட்சம் செலுத்தும்படி மெசேஜ் வந்தது. சந்தேகம் அடைந்த நபர், ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

பல கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், புகார்தாரர் பணப்பரிமாற்றம் செய்த வங்கிக்கணக்கு, உத்தர பிரதேசத்தை சேர்ந்தவருடையது என்பதை கண்டுபிடித்தனர். அவருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினர்.

அதன்படி அவரும் பெங்களூருக்கு வந்தார். அவரை விசாரித்தபோது, பணப்பரிமாற்றம் நடந்த அனைத்து கணக்குகளும், மும்பையை சேர்ந்த நபர்களுடையது என்பது தெரிந்தது.

மோசடி செய்து பணம் சம்பாதிக்க, உத்தர பிரதேசத்தின் கல்லுாரி மாணவர்கள், கிராமப்புறங்களில் வசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியதும், இதற்காக அவர்களுக்கு கமிஷன் கொடுத்ததும் தெரிய வந்தது.

அதன்பின் ஆடுகோடி போலீசார், விசாரணை நடத்தி பிரயாக்ராஜின், கமலா நகரில் வசிக்கும் 10 பேரையும், இவர்களுக்கு உதவியாக இருந்த இருவரையும் கைது செய்து, பெங்களூருக்கு அழைத்து வந்தனர்.

வீட்டில் இருந்தபடி வேலை என்ற பெயரில் பலரிடம், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த, ஹர்ஷவர்தன், சோனு, ஆகாஷ்குமார் யாதவ், கோரக்நாத் யாதவ், சஞ்சித்குமார், ஆகாஷ்குமார், அமித் யாதவ், கவுரவ் பிரதாப் சிங், பிரிஜேஷ் சிங், ராஜ் மிஸ்ரா, துஷார் மிஸ்ரா, கவுதம் சைலேஷ் ஆகியோர் கைதாகினர்.

இவர்களிடம் இருந்து 400 சிம்கார்டுkள், 160 ஏ.டி.எம்., கார்டுகள், 17 காசோலைகள், 27 மொபைல் போன்கள், 22 வங்கி பாஸ் புத்தகங்கள், 15,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement