சுகாஸ் ஷெட்டி கொலைக்கு உதவிய மூவருக்கு காப்பு

மங்களூரு: சுகாஸ் ஷெட்டி கொலைக்கு உதவிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தட்சிண கன்னடாவின் பன்ட்வால் புலிமயலு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகாஸ் ஷெட்டி, 30. பஜ்ரங் தள் தொண்டர். இவரை கடந்த 1ம் தேதி மங்களூரு பஜ்பே கின்னிபதிவு பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இதுதொடர்பாக அடுத்த சில நாட்களில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்காலம் என, ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், சுகாஸ் ஷெட்டி கொலைக்கு உதவி செய்த கலவருவை சேர்ந்த அசாருதீன், 29, பாஜ்பேவை சேர்ந்த அப்துல் காதர், 24, வாமஞ்சூரை சேர்ந்த நவ்சத், 39, ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதில், அசாருதீன் சுகாஸ் ஷெட்டியின் நடமாட்டம் குறித்து தகவல் கொடுத்தற்காகவும்; அப்துல் காதர் கொலையாளிகள் காரில் தப்பிச் செல்ல உதவி செய்ததற்காகவும்; நவ்சத், கொலை செய்வதற்காக திட்டமிடுதலில் பங்கு பெற்றதற்காகவும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்களில் நவ்சத், அசாருதீன் ஆகிய இருவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement