பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க பயிற்சி: டில்லியில் நடந்தது

திருவாடானை: தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது.

முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் களப்பணியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

அவர்களுக்கு சில தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் 234 பேர் தேர்வு செய்யப்பட்டு டில்லியில் சில நாட்களுக்கு முன்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திருவாடானை சட்டசபை தொகுதியில் 247 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

இத்தொகுதி சார்பில் ஓட்டுச்சாவடி அலுவலர்களின் கண்காணிப்பாளர் மெய்யப்பன் டில்லி சென்று அங்கு நடந்த பயிற்சியில் கலந்து கொண்டார். தேர்தல் ஆணையம் கண்காணிப்பாளர்களுக்கு டில்லியில் பயிற்சி அளிப்பது இது முதல் முறையாகும். 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் பிழைகள் இல்லாமல் தயார் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.

மின்னணு ஓட்டுபதிவு இயந்திரம் சரியாகவும், துல்லியமாகவும் இருக்கிறதா என்பதை சரிபார்ப்பது, ஓட்டுப்பதிவு முடிந்ததும் இயந்திரத்தில் தரவுகளை பரிசோதித்து ஓட்டுப்பதிவின் முடிவுகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் முறை போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பயிற்சி அளிக்கப்பட்ட கண்காணிப்பாளர் மெய்யப்பன், திருவாடானை தொகுதியில் உள்ள 247 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கும் பயிற்சி அளிப்பர். இதற்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

Advertisement