மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்

உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம்- உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பின்புறம் கண்மாய் கரையோரம் பழமையான கோவிந்த பெருமாள் கோயிலில் மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பல்வேறு மண்டகப்படியை கடந்து மீண்டும் அழகர் கோயிலில் தனது இருப்பு நிலையை அடைந்த பின் இக்கோயிலில் தலுகை எனப்படும் அன்னதான விழா நடக்கிறது.

இதற்காக பத்து நாட்களுக்கு முன்பாகவே உத்தரகோசமங்கை யாதவ மக்கள் திரி எடுத்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று விதைப்பு எனும் நெல் உள்ளிட்ட தானியங்களை பெறுகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி காய்கறிகள் நறுக்கும் பணியிலும் சமையல் செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஒரு அறையில் பனை ஓலையின் மீது வடித்த சாதம் பெரிய அளவில் கொட்டப்பட்டது. முன்னதாக மூலவர் கோவிந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு வடமாலை சாற்றப்பட்டது.

கோவிந்த பெருமாள் கோயிலில் இருந்து தொட்டுக் கொடுக்கப்பட்ட மண்வெட்டியை கொண்டு குவிக்கப்பட்ட சாதத்தை கிளறி வட்டுகளில் பரிமாறப்பட்டது. மாலை 6:00 முதல் இரவு 11:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

கோயில் விழா குழுவினர் கூறியதாவது: பல நுாற்றாண்டுகளாக தலுகை என்னும் அன்னதான விழாவை விமர்சையாக நடத்தி வருகிறோம். சேற்றை கிளறுவதற்கு பயன்படுவது மண்வெட்டி. அதைப்போல சோற்றை கிளறி விவசாயத்திற்கும் உழவுத் தொழிலுக்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக இப்பணியை செய்கிறோம் என்றனர்.

Advertisement