ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?

2

மதுரை : ராணுவத்தினர் குறித்து இழிவாக பேசியதாகமுன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக்தலைவர் முன்னாள் கர்னல் அரசு குற்றம்சாட்டினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:



'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்த விஷயத்தில் 'படை வீரர்கள் சண்டை போட்டாங்களா' என செல்லுார் ராஜூ கூறியது கண்டிக்கக்கூடியது. அவரது கருத்தால் இந்நாள்,முன்னாள் படை வீரர்கள் மனவேதனையில் உள்ளோம். செல்லுார் ராஜூ கருத்தை திரும்ப பெறுவதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வரும் சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஓட்டு கேட்டு தோற்கடிக்க செய்வோம். முன்னாள் முப்படை வீரர்கள் நலத்துறை அமைச்சராக இருந்தவர். பல கமிட்டிகளுக்கு தலைவராக இருந்தவர் இப்படி பேசியது வருத்தமளிக்கிறது. இவ்வாறு கூறினார்.

உண்மையில் பேசியது என்ன



செல்லுார் ராஜூ நமது நிருபரிடம் கூறியதாவது: நம் நாட்டை இமை போல் காக்கும் ராணுவவீரர்களை நான் அவமதித்ததாக தி.மு.க., துாண்டுதலால் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டன. இதன் உண்மை தன்மையை ஆராயாமல் முன்னாள் ராணுவ வீரர்கள் என்னை விமர்சித்து வருவது வேதனை அளிக்கிறது.


'பாகிஸ்தானுடன் போரிட்ட இந்திய ராணுவ வீரர்களை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளாரே' என நிருபர்கள் கேட்ட போது, 'பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதற்கு ஒவ்வொரு இந்தியரும் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோரை வழி நடத்தி, துாங்காமல் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.


பிரதமரை பாராட்டாமல்ராணுவ வீரர்களை பாராட்டுவதாக தி.மு.க., நாடகமாடுகிறது. ஸ்டாலினுக்கு பதிலாக, அரசு செயலர்களை பாராட்டி ஊர்வலம் நடத்தினால் தி.மு.க.,வினர் ஏற்றுக்கொள்வார்களா' எனச்சொன்னேன்.நான் அமைச்சராக இருந்த பத்தாண்டு காலத்தில் முன்னாள் ராணுவவீரர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் நிதியுதவி என்பதை ரூ.20 லட்சமாக உயர்த்தினேன். கொடிநாள் நிதி அதிகம் வசூலித்து கொடுத்து தமிழகத்திலேயே முதல் மாநிலமாக திகழச் செய்தேன்.


நான் ராணுவவீரர்களுக்கு எதிரானவன் என்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கும் தி.மு.க.,வின் எண்ணம் ஈடேறாது. ராணுவ கட்டமைப்புடன் செயல்படும் அ.தி.மு.க., என்றைக்குமே ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு கூறினார்.

Advertisement