கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!

11


ஒட்டாவா: கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசித்து வரும் நிலையில், அதற்கேற்றாற் போல, அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.


கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இந்திய வம்சாளியினரான அனிதா ஆனந்த், மனீந்தர் சித்து, ரூபி சஹோதா, ரந்தீப் சாராய் ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.


அனிதா ஆனந்த், வெளியுறவுத்துறை அமைச்சர்




இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்த், 1967ம் ஆண்டு மே 20ம் தேதி கென்ட்விலேவில் பிறந்தார். இவரது தந்தை தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர். கடந்த முறை தொழில்துறை, அறிவியல் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த்,57, பதவி வகித்து வந்தார்.


தற்போது, முக்கிய துறையான வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், வெளியுறவுத்துறை அமைச்சராக ஒரு ஹிந்து முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக, பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் கவனித்து வந்துள்ளார்.


மனீந்தர் சித்து, சர்வதேச வர்த்தகத்துறை




பிராம்டன் கிழக்கு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மனீந்தர் சித்து, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக வரி உயர்வு அச்சுறுத்தலை மேற்கொண்டு வரும் நிலையில், இவரது துறையின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


சித்து பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். சிறுவயதிலேயே பிராம்டனுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். டோரன்டோ பல்கலையில் பட்டப்படிப்பை படித்து முடித்தார்.


ரூபே சஹோதா, குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மாநிலச் செயலாளர்





குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மாநில செயலாளராக ரூபி சஹோதா,44, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் பிராம்ப்டன் வடக்கு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.


டொராண்டோவில் குடியேறிய பஞ்சாபி பெற்றோருக்குப் பிறந்தவர். சஸ்காட்செவன் பல்கலையில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.


ரந்தீப் சாராய், சர்வதேச மேம்பாட்டுக்கான மாநில செயலாளர்





ரந்தீப் சாராய், 59, கனடாவின் சர்வதேச மேம்பாட்டுக்கான மாநில செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். வெளிநாட்டு உதவி முயற்சிகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை மேற்பார்வையிடுகிறார். அவர் சர்ரே மையம் தொகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4வது முறையாக எம்.பி.,யாகியுள்ளார்.


அதிகபட்சம்

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கார்னேவின் லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் மொத்தம் 22 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement