குன்னுார் மார்க்கெட்டில் கடையடைப்பு; அலறிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை

குன்னுார் : குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரத்தால் திடீர் கடையடைப்பு போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாயில் புதிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு வியாபாரிகள் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி ரோஜா கண்காட்சியில் குன்னுார் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன்,'கட்டாயம் கட்டடத்தை இடித்து பார்க்கிங் வசதியுடன் புதிய கடைகள் கட்டப்படும்,' என, தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் குன்னுார் அனைத்து வணிகர்கள் நல சங்கத்தினர், கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். தகவலறிந்த போலீசார் நிர்வாகிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த கூறினர். குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா, டி. எஸ்.பி., ரவி முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. கலெக்டரை வரும், 17ம் தேதி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த கூறினர். சங்க நிர்வாகிகள். வியாபாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, 'வரும் 17ம் தேதிக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும்,' என நிர்வாகிகள் தெரிவித்தனர். கடைகளை திறந்தனர்.

Advertisement