பெண் கொலை: போலீசார் விசாரணை

பந்தலூர்: பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்தது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அமைந்துள்ளது நெலாக்கோட்டை. இங்கு கூவச்சோலை வீரப்பன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவர் தேவர்சோலை அருகே பாடந்துறை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், இவரது மனைவி 55 வயதான மைமூனா தனது கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அவர் போன் எடுக்காத நிலையில், வேலை முடிந்து, வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இவர் மனைவியை வெளியில் இருந்து அழைத்த போது சத்தம் இல்லாத நிலையில், கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டின் சமையல் அறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கீழே கிடந்த மனைவியின் உடலைப் பார்த்து கதறி உள்ளார்.
இவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, மைமூனா உயிரிழந்தது தெரிய வந்தது.

இது குறித்து நெலக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் முதலில் குக்கர் வெடித்து உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டது. எனினும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில், மைமூனா கழுத்தில் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்ததும், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.


நள்ளிரவில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, தேவாலா டி.எஸ்.பி. ஜெயபாலன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நகைக்காக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. கொலை செய்தவர்கள் யார் என்று தெரியாத நிலையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement