நாராயண குருகுலத்தில் ஆன்மிக நிகழ்ச்சி

ஊட்டி : ஊட்டி பர்ன்ஹில் மஞ்சனக்கொரை பகுதியில் அமைந்துள்ள நாராயண குருகுலத்தில் வருடாந்திர பூஜை மற்றும் குரு நித்ய சைதன்யாவின், 21ம் ஆண்டு மகா சமாதி நாள் நிகிழ்ச்சி நடந்தது.

காலையில் நடந்த ஹோமம் நிகழ்ச்சியை அடுத்து, சுவாமி ஸ்வரன் பேசுகையில்,''மனிதர்கள் மேலான ஆன்மிக கல்வியையும், ஆழமான கருத்துக்களையும் உணரும் போது, உலகளாவிய நேசம் உருவாகும். இதை தான் நாராயண குருகுலம் கற்பித்து கொண்டிருக்கிறது,''என்றார்.

மகா மண்டலீஸ்வரர் சுவாமி ஆனந்தவனம் வாரணாசி தலைமை வகித்து பேசுகையில், ''குரு பரம்பரை நாட்டின் மிகப் பழமையான ஆன்மிக தொடர்பாக உள்ளது. சகல உயிர்களும் இயங்க, சக்தியாக விளங்கும் பேரன்பை உலகிற்கு வழங்கி வருகிறது. ஆன்மிக அறிவின் தேடலை குருகுலம் பூர்த்தி செய்கிறது,''என்றார்.

ஆன்மிகவாதி சித்தார்த் பேசுகையில், ''சாமானிய மக்களின் வாழ்க்கை அனைத்தையும் இணைத்து வாழும் உயர்ந்த தன்மையை கற்பிக்கும் இடமாக குருகுலம் திகழ்கிறது. குருவின் உலகளாவிய தத்துவ கருத்துக்களை, இந்திய கலாச்சாரத்தோடு கற்பித்து சமூகத்திற்கான உயர்ந்த சிந்தனைக்கு எடுத்து செல்வதற்கு காரணமாக திகழ்கிறது,''என்றார்.

நிகழ்ச்சியில், பகவத் சைதன்யா பஜனை மற்றும் யாழினி பரதநாட்டிய நிகழ்வு இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சுவாமி வியாச பிரசாத், சுவாமினி கார்கி காயத்ரிகிரி செய்திருந்தனர்.

Advertisement