ரயிலில் முன்பதிவு பெட்டியில் இதர பயணியரை தடுக்க ஆர்.பி.எப்., சிறப்பு குழு

2

சென்னை : ரயிலில் முன்பதிவு பெட்டிகளில், இதர பயணியர் பயணம் செய்வதை தடுக்க, சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:



கோடை விடுமுறையில் வழக்கத்தை விட, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால், கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

முன்பதிவு செய்யாத பயணியர், திடீரென முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிக்கின்றனர். இதனால், முன்பதிவு செய்த பயணியருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத்தடுக்க, விரைவு ரயில்களில், டிக்கெட் பரிசோதகர்கள் குழுவினர், திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை - கோவை, திருச்சி, மதுரை வழித்தடங்களில் செல்லும் ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படை குழுவினரும் சோதனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பர். முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமிக்கும் மற்ற பயணியரை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது.

உரிய டிக்கெட் இல்லாதவர்கள் கீழே இறக்கி விடப்பட்டு, முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். டிக்கெட் இல்லாமல் வருவோருக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement