சென்னையில் உண்ணாவிரதம் அரசு மருத்துவர் சங்கம் அறிவிப்பு

விருத்தாசலம்: அரசாணை 354 மறுசீராய்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவர் சங்கங்களின், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளரான, விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் கூறியதாவது:

அரசாணை 354 மறுசீராய்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை கடந்த 2019ல் முன்வைத்து போராடினோம். அப்போது ஆதரவு தெரிவித்து, தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் முதல்வர் ஸ்டாலின்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு சீராய்வு செய்வதாக உறுதியளித்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாக்குறுதியை கூட தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. பேராசிரியர், இணை பேராசிரியர்கள் மருத்துவக் கல்லுாரிகளில் பாடம் நடத்துவது மட்டுமில்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சையும், ஆபரேஷனும் செய்கின்றனர். எனவே, குறைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளில் பேட்ஜ் அணிந்து, கடந்த 2 நாட்களாக மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். 2 வாரங்களுக்கு பின் சென்னையில் பொறுப்பாளர்கள் தர்ணா போராட்டம் நடத்துகிறோம்.

பின்னர், கடலுார், சேலம், நெல்லை, சென்னை, திருச்சி ஆகிய மண்டல அளவில் தர்ணா, அதன்பின், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. புதிய கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகிறதே தவிர, மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கவில்லை. திருநெல்வேலியில் மருத்துவக் கல்லுாரி இருப்பதால், தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தது.

தென்காசி மாவட்டமாக மாறியதால், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாறியது. ஆனால், அங்கு 3 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மாவட்ட தலைமை மருத்துவமனை என போர்டு மட்டுமே வைத்துள்ளனர். எனவே, அரசாணை 354ஐ மறுசீராய்வு செய்ய வேண்டும். நோயாளிகள், அறுவை சிகிச்சைகளுக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement