புதுச்சேரி நகை கடையில் கர்நாடகா போலீசார் சோதனை

புதுச்சேரி: பெங்களூருவில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக புதுச்சேரி நகை கடையில் கர்நாடகா போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு விமான நிலையம் அருகேவுள்ள 4 வீடுகளில் கடந்த மார்ச் மாதம் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து, கர்நாடகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், கிடைத்த தகவலின்பேரில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

விசாரணையில் இத்திருட்டில், புதுச்சேரி முதலியார்பேட்டை சேர்ந்த ரகுராம் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பேரில், ரகுராமை கைது செய்தனர். விசாரணையில், திருடிய 30 சவரன் நகையை, அவரது நண்பரான அரியாங்குப்பத்தை சேர்ந்த நட்சத்திரம் என்பவர் மூலம் விற்றதாக தெரிய வந்தது.

அதன்பேரில், ரகுராமனுடன், புதுச்சேரிக்கு வந்த கர்நாடகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசாருதீன் தலைமையிலான போலீசார், நட்சத்திரத்தை கைது செய்து விசாரித்தனர்.

அவர் அளித்த தகவலின்பேரில், புதுச்சேரி, பாரதி வீதியில் உள்ள நகைக் கடையில் போலீசார் சோதனையிட்டனர்.

பின்னர், கடை உரிமையாளரை ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இச்சம்பவம் நகை வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement