டில்லியில் கலகலக்கிறது ஆம் ஆத்மி; புதிய கட்சி தொடங்கிய அதிருப்தியாளர்கள்

7

புதுடில்லி: டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 15 கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்தது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் முகேஷ் கோயல் தலைமையில் புதிய கட்சியை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.



நடைபெற இருக்கும் டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த சூழலில், ஆம் ஆத்மியின் 15 கவுன்சிலர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், முகேஷ் கோயல் தலைமையில் இந்தியபிரஸ்தா விகாஷ் என்ற புதிய கட்சியையும் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இது ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் கோயல் உள்பட 15 கவுன்சிலர்களும் கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலின் போது, காங்கிரஸில் இருந்து விலகி, ஆம்ஆத்மியில் இணைந்தனர். தற்போது, ஆம் ஆத்மியில் இருந்து விலகியுள்ளனர். முகேஷ் கோயல் கடந்த 25 ஆண்டுகளாக மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வந்துள்ளார்.

இது குறித்து பதவியை ராஜினாமா செய்த ஹிமானி ஜெயின் கூறுகையில், "நாங்கள் அதிகாரத்தில் இருந்த போதும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக எந்தப் பணிகளும் நடக்கவில்லை. நாங்கள் தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். டில்லியின் வளர்ச்சியை கொள்கையாக வைத்து இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது," என்றார்.

Advertisement