தொழிலதிபர் வழக்கை தீர்க்க ரூ.2 கோடி லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரி மீது வழக்கு

கொச்சி: தொழிலதிபர் வழக்கை தீர்க்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கூறப்படும் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி மீது கேரள மாநில லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் கொட்டாரக்கராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதில் முறைகேடு நடந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சேகர் குமார் அவரை விசாரித்தார். அப்போது, தொழிலதிபரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்வதாக சேகர் குமார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சேகர் குமாரின் தரகர் எனக்கூறிக் கொண்டு வில்சன் என்பவர், தொழிலதிபரை தொடர்பு கொண்டார். அப்போது, வழக்கு விசாரணையை முடிக்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டு உள்ளார். தொடர்ந்து, அமலாக்கத்துறையின் சம்மன் நகல்களை தொழிலதிபருக்கு அனுப்பிய வில்சன், இந்த முறை ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார்.
இதனையடுத்து, தொழிலதிபர் மாநில லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரை உறுதி செய்த அதிகாரிகள், குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
அவர்களின் அறிவுரையின்படி லஞ்சம் வாங்கிய வில்சனை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அதேநாளில் தொழிலதிபரை தொடர்பு கொண்டு மஹாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள வங்கிக்கணக்கிற்கு லஞ்சப்பணத்தை செலுத்தும்படி கூறிய ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் ஜெயின் என்பவரையும் அதிகாரிகள் பிடித்தனர்.
மேலும், இருவர் அளித்த தகவலின்படி கொச்சியைச் சேர்ந்த ஆடிட்டர் ரஞ்சித் வாரியர் என்பவரையும் இன்று கைது செய்தனர். இவர் தான், தொழிலதிபர் குறித்த தகவல்களை வில்சனிடம் கொடுத்தது தெரியவந்தது. 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் சேகர் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் துறை ரீதியிலான விசாரணையை துவக்கி உள்ளனர்.



மேலும்
-
வெற்றிகளை குவித்த வெங்கடேஸ்வரா வித்யாலயா
-
எஸ்.என்.எஸ்.,கல்லுாரியில் பட்டமளிப்பு விழா சிறப்பு
-
தொடர்கிறது: தூரெடுக்காத சாக்கடையால் ரோட்டில் ஓடும் கழிவு: சிவகங்கையில் சுகாதாரக்கேடு அவலம்
-
தபால் துறையில் சிறப்பான பங்களிப்பு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கவுரவம்
-
தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்
-
வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு