வேளச்சேரியில் மின்மாற்றிகளில் தீ விபத்து பல மணி நேர மின்தடையால் மக்கள் அவதி

வேளச்சேரி,:கோடைகாலமாக இருப்பதால், மின்சார செலவு அதிகரிக்கும். நள்ளிரவில் சீரான மின் வினியோகம் செல்லாமல், மின் மாற்றிகள் வெடிப்பது வேளச்சேரி பகுதியில் அடிக்கடி நடக்கிறது.
வெடிக்கும்போது, அதில் இருந்து வெளியேறும் தீக்கனல், தரையில் விழுகிறது. தரையில் காய்ந்த குப்பை கிடந்தால், அதில் தீப்பிடித்து, மின்மாற்றியில் பரவுகிறது.
இதனால், மின் வினியோகம் தடைபடுவதுடன், மின்சாதன பொருட்கள் தீயில் சேதமடைகின்றன.
கடந்த வாரம், வேளச்சேரி, நியூ செக்கரட்ரியேட் காலனியில் உள்ள மின் மாற்றியில் வெளியேறிய தீக்கனல், குப்பையில் விழுந்து தீ பிடித்தது.
இரண்டு நாட்களுக்கு முன், தண்டீஸ்வரம் நகர், தண்டபாணி தெருவில், இரண்டு மின் மாற்றிகளில் இதேபோல் தீ பிடித்தது.
அதில், தண்டபாணி தெருவில், மின்மாற்றி அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் தீயில் கருகின.
நேற்று முன்தினம் நள்ளிரவு, வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மூன்றாவது பிரதான சாலையில் உள்ள மின் மாற்றியில் தீக்கனல் தெறித்து, கீழே கிடந்த குப்பையில் தீ பிடித்தது. இதனால், அப்பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மின்மாற்றியில் தீக்கனல் தெறித்து மின்தடை ஏற்பட்டால், அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் மின் வினியோகம் சீராகி விடும்.
குப்பையில் தீ பிடித்து, மின்மாற்றியில் பரவினால், 10 முதல் 15 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.
மின்மாற்றியை ஒட்டி குப்பை கொட்டுவதை தடுக்க, வாரியம், மாநகராட்சி இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
குப்பையால் தான் பல இடங்களில் மின்மாற்றிகளில் தீ பிடித்து, மின்சாதன பொருட்கள் சேதமடைந்து, பல மணி நேரம் மின் தடை நீடிக்கிறது.
மின்மாற்றிகளின் அருகில் குப்பை தொட்டி வைக்க வேண்டாம் என, மாநகராட்சியிடம் கூறி உள்ளோம்.
இருந்தும், சில இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் தீ விபத்தை உணர்ந்து, குப்பையை மின் மாற்றிகளைச் சுற்றி கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…