மாநகராட்சி அறிவிப்பை மதிக்காமல் அரசியல் கட்சி பேனர் வைப்பதால் பீதி

சென்னை:திருமங்கலம், 100 அடி சாலை சந்திப்பில் பேனர் வைக்கக்கூடாது என, அறிவிப்பு பலகையை மாநகராட்சி வைத்தும், அரசியல் கட்சியினர் அடாவடியாக பேனர் வைத்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை, அண்ணா நகர், இரண்டாவது அவென்யூ - திருமங்கலம் 100 அடி சாலை சந்திப்பில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், பெரிய அளவிலான விளம்பர பேனர்களை வைத்து வருகின்றனர்.

சாலையையொட்டி, மரக்கட்டைகளால் சாரம் கட்டி, பெரிய அளவில் அமைக்கப்படும் பேனரால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து தொடர்ந்து புகார் எழுந்ததை அடுத்து, 'திருமங்கலம் 100 அடி சாலையில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது' என அறிவித்து, மாநகராட்சி பலகையை வைத்தது.

அவற்றை அலட்சியப்படுத்தி, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் விளம்பர பேனர் வைத்தனர். இதற்கிடையே, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையை, மர்ம நபர்கள் அகற்றினர்.

இதையடுத்து, மாநகராட்சி சார்பில், 'இவ்விடத்தில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது. அவ்வாறு வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பலகையை மீண்டும் வைத்துள்ளது.

ஆனால், அதன் அருகிலேயே, வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினரின் விளம்பர பேனர்களை, 100 அடி சாலையை ஒட்டியே வைத்துள்ளனர்.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

மரக்கட்டகளை முட்டுக்கொடுத்து, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறிது வேகமாக காற்று அடித்தால்கூட ஆடுகின்றன. இவை, மேலே விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.

இப்பகுதியில், சாலையை ஒட்டி வைக்கின்றனர் அல்லது நடைபாதைகளை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், பாரபட்சமின்றி விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement