625 தனியார் மின்சார பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை

சென்னை:''சென்னையில் முதல்கட்டமாக, 625 தனியார் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும். கட்டணத்தில் மாற்றம் இல்லை,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், முதல்கட்டமாக ஐந்து பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகள் இயக்குவதற்கான, சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இங்கிருந்து அடுத்த மாதத்திற்குள் இந்த மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று பார்வையிட்டார்.
பின், அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:
சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் பணிமனைகளில் இருந்து டீசல் பேருந்துகளை இயக்க முடியாது. எனவே, இனி வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். மின்சார பேருந்துகளுக்கான கட்டணத்தில் எவ்வித மாற்றமுமில்லை.
இங்குள்ள டீசல் பேருந்துகளை வெவ்வேறு பணிமனைகளுக்கு பிரித்து வழங்கியுள்ளோம்.
சென்னையில் முதல்கட்டமாக, 625 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளோம். ஒரு முறை, ஒன்றரை மணி நேரம் சார்ஜ் செய்தால், மின்சார பேருந்துகளை 200 கி.மீ., துாரம் இயக்கலாம். சார்ஜிங் மையம் உள்ளிட்ட ஏற்பாடுகள் நிறைவடைந்த பிறகு, முதல்வர் திட்டத்தை துவங்கி வைப்பார்.
கூடுதல் விலை கொண்ட மின்சார பேருந்துகளை கையாள பணியாளர்கள் இல்லாததால், டெண்டரில் தேர்வான நிறுவனமே இவற்றை பராமரித்து இயக்கும். இதில் அரசின் நடத்துனர்கள் பணியாற்றுவர். மின்சார பேருந்துகள் வருகை காரணமாக டீசல் பேருந்து எண்ணிக்கை குறைக்கப்படாது. பணியாளர் எண்ணிக்கையும் குறைக்கப்படாது. அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் பேச்சே கிடையாது.
போக்குவரத்து ஊழியர்கள் மது அருந்தி பணிக்கு வரக் கூடாது என, தொடர்ந்து அறிவுரை வழங்குகிறோம். மது அருந்தி பணிக்கு வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற புகார்களுக்கு '149' என்ற எண்ணை பயணியர் தொடர்பு கொள்ளலாம்.
போக்குவரத்து கழக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடர்ந்து நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர், இணை நிர்வாக இயக்குனர் நடராஜன் ஆகியோர் இருந்தனர்.
மேலும்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…