செம்பரம்பாக்கம் ஏரி நீரை இருமடங்காக... குழாய் பதிப்பில் சிக்கல்:வினியோகிக்கும் திட்டம் இழுபறி

சென்னை:செம்பரம்பாக்கம் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, இருமடங்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் பதிப்பு திட்டம், பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளில் இருந்து, மாதம் 1 டி.எம்.சி., நீர் எடுக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
பூண்டி, சோழவரம் ஏரிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. அதனால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து, குழாய் வழியாக குடிநீர் எடுத்து சென்று, சுத்திகரிப்பு செய்த பின், சென்னையில் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில் பிரதான நீராதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இங்கு தேங்கும் நீரை வைத்து, சென்னையின் மூன்றரை மாத குடிநீர் தேவையை, எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.
இங்குள்ள சுத்திகரிப்பு நிலையம், 56 கோடி லிட்டர் குடிநீரை தினமும் வினியோகம் செய்யும் திறன் உடையது.
இந்த நீர், சென்னை மட்டுமின்றி, 'சிப்காட்' தொழில் நிறுவனங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தொழிற்சாலைகள் மட்டுமின்றி, வீடு, கடைகளுக்கும் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், வினியோகம் குறைவாக உள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீர் வினியோகத்தை, இருமடங்கு அதிகரிக்க, திட்டம் வகுக்கப்பட்டது.
இதற்காக, குழாய் பதிக்கும் திட்டத்தை, கடந்த மாதம் முடிக்க, சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டிருந்தது. இதில் 75 சதவீதம் மட்டுமே பணி முடிவடைந்துள்ளது. ஆனால், 90 சதவீதம் முடிந்ததாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
குறிப்பிட்ட காலத்தில் இப்பணியை முடிக்காததால், இருமடங்கு குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம், மேலும் பல மாதம் தாமதம் ஏற்படும் சூழல் உள்ளது. இத்திட்டம் முடிந்த பிறகு ஏரியில் மேம்பாட்டு பணிகளை துவக்க, நீர்வளத்துறை முடிவு செய்தது. அதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 53 கோடி லிட்டர் கொள்ளளவு உடையது. இதில் 26.5 கோடி லிட்டர் குடிநீர் சென்னைக்கு வழங்கப்படுகிறது.
கூடுதலாக, 26.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், 44.33 கோடி ரூபாயில், பிரதான குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
பூந்தமல்லி புறவழி தேசிய நெடுஞ்சாலையில், 20 அடி ஆழம், 3,000 மி.மீ., விட்டம் உடைய சிமென்ட் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
சாலை சேதம் ஏற்படாத வகையில், நவீன தொழில்நுட்ப வசதியுடன் பணி நடக்கிறது. இந்த குழாய்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை வழியாக வருவதால், அதை ஒட்டிய தேவைக்கு ஏற்ப நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் ஆகிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தவிர, தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதி, ஏற்கனவே நியமித்த ஒப்பந்த நிறுவனம் ஓட்டம், புதிய நிறுவனம் நியமனம் போன்ற பல்வேறு காரணங்களால், பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள,30 கி.மீ., துாரத்தில், 1.2 கி.மீ., துாரம் மட்டுமே குழாய் பதிக்க வேண்டி உள்ளது. ஓரிரு மாதத்தில் மொத்த பணிகளும் முடியும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில், இருமடங்கு குடிநீர் வினியோக திட்டம் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏரி கொள்ளளவு கையிருப்பு (டி.எம்.சி.,)
புழல் 3.30 2.99
சோழவரம் 1.08 0.14
செம்பரம்பாக்கம் 3.64 2.25
பூண்டி 3.23 1.44
தேர்வாய் கண்டிகை 0.50 0.31
வீராணம் 1.46 0.53
மொத்தம் 13.21 7.76

மேலும்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…