லாரி மோதி 12 மாடுகள் சாவு 98 மாடுகள் தெறித்து ஓட்டம்

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில், திருப்புவனம் அருகே கிடை மாடுகள் கூட்டத்தின் மீது லாரி மோதியதில், 12 மாடுகள் உயிரிழந்தன.
அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த, 98 மாடுகள் மாயமானதால், உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.
மதுரை, ஆண்டார்கொட்டாரத்தில் இருந்து அய்யனார் என்பவர், நேற்று முன்தினம் இரவு, சிவகங்கை மாவட்டம், பழையனுார் அருகே கிடாக்குழி கிராமத்தில் கிடை அமைக்க, 110 மாடுகளை ஓட்டிச் சென்றார்.
மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சென்ற போது, மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி, கிடை மாடு கூட்டத்தில் புகுந்தது. இதில், 12 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
அதிர்ச்சியில், 98 மாடுகள் நாலாபுறமும் சிதறி ஓடின.
இருட்டில் மாடுகளை தேடி அய்யனார் உட்பட மாடுகளை ஓட்டி வந்தவர்கள் சென்றனர். உயிரிழந்த மாடுகள் சில சினையாக இருந்தன. புலிக்குளம் இன மாடுகளான இவை, 20,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை மதிப்புடையவை.
'சிதறி ஓடிய மாடுகளை பிடிக்க வாய்ப்பில்லை. காரணம், அவை கிடை மாடுகள் என்பதால் கழுத்தில் கயிறு இருக்காது. கூட்டமாக இருக்கும் வரை கட்டுப்பாடு இருக்கும். தனித்து விட்டால் அவற்றை பிடிக்க முடியாது' என, கதறுகின்றனர் உரிமையாளர்கள்.
விபத்து குறித்து, திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு தினங்களுக்கு முன், அரசு பஸ் மோதியதில், 16 மாடுகள் உயிரிழந்தன. தற்போது திருப்புவனத்தில், 12 மாடுகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…