போதை டிரைவரிடம் பயணியர் தகராறு

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து, கமுதி வழியாக சென்னைக்கு தினமும், 'ஸ்ரீகிருஷ்ணா' என்ற ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது.

நேற்று இயக்கப்பட்ட பஸ்சின் டிரைவர் சுப்பையா மது போதையில் தாறுமாறாக பஸ்சை ஓட்டியதால், ஒரு பயணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

அச்சமடைந்த பயணியர், கமுதி அருகே கோட்டைமேட்டில் பஸ்சை நிறுத்தி, டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணியர் கமுதி போலீசில் புகார் அளித்தனர்.

ஆம்னி பஸ் உரிமையாளர், மாற்று டிரைவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். மாற்று டிரைவர் அந்த பஸ்சை சென்னைக்கு ஓட்டிச் சென்றார்.

போதை டிரைவர் சுப்பையாவிடம் கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்சை போதையில் ஓட்டி, கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement