மேட்டூர் அணையில் ஜூன் 12ல் நீர் திறப்பு; டெல்டா விவசாயிகள் சாகுபடிக்கு ஆயத்தம்

மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து, வரும் ஜூன் 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள், சாகுபடிக்கு ஆயத்த பணியை தொடங்கி உள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து, ஜூன், 12ல் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன்மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படும்.
நீர் திறக்க அணை நீர்மட்டம், 90 அடிக்கு மேல், நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,க்கு மேல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன், 12ல் அணை நீர்மட்டம், 43.52 அடி, நீர்இருப்பு, 13.97 டி.எம்.சி.,யாக இருந்ததால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. பின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து, மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஆண்டு ஜூலை, 28ல் அணை நீர்மட்டம், 112.27 அடியாக உயர்ந்தது. இதனால், 45 நாட்கள் தாமதமாக, டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு கடந்த ஜன., 28ல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த அக்., 23ல், 100 அடியாக உயர்ந்த நீர்மட்டம் நேற்று, 108.31 அடி, நீர்இருப்பு, 76.03 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 3,479 கனஅடி நீர் வந்தது. தொடர்ந்து, 206 நாட்களாக அணை நீர்மட்டம், 100 அடிக்கு மேலாக நீடிக்கிறது. இதனால் குறித்தபடி ஜூன், 12ல் மேட்டூர் அணையில் நீர்திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடிக்கு ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.
மேலும், மேட்டூர் அணையில் மதகுகள் சீரமைப்பு பணி, நெடுஞ்சாலை சார்பில் சாலையோரத்தில் வளர்ந்திருந்த புல், பூண்டுகள், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த, 15ல், மேட்டூர் அணையில், சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார்.
