வயலினே வாழ்வு சாதனையாளர் பத்மாசங்கர்

வயலின் மூலம் வரும் பாட்டுக்கள் மனதை நெகிழ்வடைய செய்யும். இக்கருவியில் இருந்து வரும் இசை கவிதை போன்று அழகானது. பாடல் வரிகளில் பாடுவோரின் குரலுடன் நெருங்கிய ஒலி தரும் ஒரே கருவி வயலின் மட்டுமே'' என சென்னை வயலின் இசை வித்தகர் பத்மாசங்கர் வியப்புடன் கூறுகிறார்.
சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்...
பிறந்தது மும்பை. அம்மா லட்சுமி நாராயணன் முதல் குரு. அவர் வீணை கலைஞர், வாய்பாட்டும் பாடுவார். 3 வயதில் இருந்தே கர்நாடக இசை பயிற்சி பெற்றேன். சிறு வயதிலேயே என்னிடம் இசைஞானம் இருப்பதை கவனித்த அம்மா என்னை வயலின் இசை கலைஞராக்க ஆசைப்பட்டார். மும்பையில் இருந்த போது 6 வயதில் இருந்தே லால்குடி ஜெயராமனின் சீடர் ராமகிருஷ்ண சர்மாவிடம் வயலின் படித்தேன். சென்னையில் லால்குடி ஜெயராமனிடம் வயலின் கற்கும் ஆசையில் 19 வது வயதில் மும்பையில் இருந்து சென்னைக்கு குடியேறினோம்.
அந்த ஆசையும் நிறைவேறியது. அவரிடம் முழுமையாக கற்றேன். கல்லுாரியில் பி.காம்., முடித்தாலும், இசையில் பட்டம் பெறும் நோக்கில் வாய்பாட்டு, வயலின் இசையில் எம்.ஏ., முடித்துள்ளேன்.
''நான் வயலினை தேர்வு செய்யவில்லை, வயலின் தான் என்னை தேர்வு செய்தது,'' என்று சொல்வது போல், நான் வயலினை காதலிக்கவில்லை. வயலின் தான் என்னை காதலித்தது. அந்தளவிற்கு வயலினே வாழ்வாகி விட்டது.
ரிக்கார்டிங் தியேட்டர்களில் திரைப்பட பாடல்களுக்கு வயலின் வாசித்து வருகிறேன். கர்நாடக இசை கச்சேரிக்கு வயலின் வாசிப்பது, திரைப்பட பாடல்களை வயலினில் தனியாக வாசிப்பது என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பங்கேற்றுள்ளேன். கலைமாமணி, நாதஒலி என இது வரை 80 விருதுகளை பெற்றுள்ளேன்.
மனித குரலுக்கு நெருங்கிய ஒரே ஒலி வயலின் இசை மட்டும் தான். மேற்கத்திய, நாட்டுப்புற, சினிமா பாடல்கள் என எதுவாக இருந்தாலும், அவற்றை வயலினில் பாடிவிடுவேன். இக்கருவிக்கு மனதை கவரும் தன்மை உண்டு. வயலின் கேட்டுக்கொண்டே இருங்கள்; இசை தெரியாவிட்டாலும் வசமாகி விடுவீர்கள்.
கற்க எல்லை இல்லை என்பதற்கேற்ப இன்றைக்கும் வயலினில் புதிது புதிதாய் கற்றுக்கொண்டே தான் இருக்கிறேன்.
புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டு. வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நுாலாலயம் அமைத்துள்ளேன். ஆன்மிகம், சமையல், இசை என அனைத்து விதமான புத்தகமும், இந்நுாலகத்தில் உண்டு. வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் புத்தகம் வாங்கி வந்து நுாலகத்தை அலங்கரித்துள்ளேன்.
வெளிநாடுகளில் நிறைய கச்சேரிகள் நடத்தியுள்ளேன். அங்கு ரசிகர்கள், இசைக் கலைஞர்களிடம் அதிக அன்பு செலுத்தி வரவேற்பார்கள். இது போன்ற ரசிகர்கள் தரும் உற்சாகத்தால் சாதிக்க முடிகிறது.
நான் கற்ற இசையை, ஆர்வமுள்ளவர்களுக்கு ஆன்லைனில் கற்றுக்கொடுக்கிறேன். எந்த இசை கலைஞர்களும், வயலின் கருவி வாசிப்பது தான் மிக கஷ்டம் என்பார்கள். அந்த எண்ணத்தை முறியடிக்கும் விதமாக வயலின் இசை வாசிப்பில் சாதிக்க வேண்டும் என்றார்.