வர்த்தக வரி வசூல் இலக்கை எட்ட வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவு

பெங்களூரு: ''வர்த்தக வரி வசூலில் நிர்ணயித்த இலக்கை எட்ட வேண்டும். இதற்கு தேவையான வசதிகளை, அரசு செய்யும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக வர்த்தக வரிகள் சேவை சங்கத்தின், பொன் விழா பெங்களூரில் நேற்று நடந்தது. இதை முதல்வர் சித்தராமையா துவக்கிவைத்து பேசியதாவது:
வர்த்தக வரி சரியாக வசூலித்தால் மட்டுமே, மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே அதிகாரிகள், தங்களின் பொறுப்பை மனதில் கொண்டு, பணியாற்ற வேண்டும். இதற்கு தேவையான வசதிகளை, அரசு செய்து கொடுக்கும்.
வரி ஏய்ப்பு நடக்கிறது என்பதை, நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். நானும் ஒப்புக்கொள்கிறேன். இதை தவிர்க்கும்படி பணியாற்றுங்கள். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
வர்த்தக வரித்துறைக்கு, நடப்பாண்டு 1.20 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுங்கள். நீங்கள் தெரிவித்த பல கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்.
நீங்கள் 1.20 லட்சம் கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தால், உங்களுக்காக நான்கைந்து கோடி ரூபாய் செலவிடுவது, அரசுக்கு பெரிய விஷயமே அல்ல.
உங்கள் சங்கம் சார்பில், ஒரு பவன் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளீர்கள். இது பற்றி, அரசு ஆய்வு செய்யும். ஊதிய பாரபட்சத்தையும் சரி செய்வோம்.
உங்கள் பணியில் நான் தலையிடமாட்டேன். ஆனால் அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்யாவிட்டால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.