காபி இல்லை என்றவருக்கு கன்னத்தில் பளார்; கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காபி இல்லை என்ற ஹோட்டல் ஊழியர் கன்னத்தில் அறைந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஜோத்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் கிஷன் சிங் என்பவர் சென்றுள்ளார். அங்கு தாம் குடிக்க காபி வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் காபி இல்லை என்று கூறி உள்ளனர்.
அதனால் கோபம் அடைந்த கிஷன் சிங், ஊழியர்களை கடுமையாக திட்டி உள்ளார். பின்னர், அவர்களை தாக்கவும் எத்தனித்துள்ளார்.ஒரு கட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர் செல்போன் எண்ணை தருமாறு கேட்க, கல்லாவில் இருந்த காசாளர் தர மறுத்துள்ளார்.
கோபம் மேலும் அதிகரிக்க, நேராக அவரின் அறைக்கே சென்று கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் கடையினுள் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவில் வீடியோவாக பதிவாகி வைரலானது.
கான்ஸ்டபிள் கிஷன் சிங் நடவடிக்கை குறித்து கடும் விமர்னங்கள் எழுந்தன. இதையடுத்து, வீடியோவை ஆதாரமாக கொண்ட போலீஸ் துணை கமிஷனர் அலோக் ஸ்ரீவாஸ்த்வா, கிஷன் சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
