ஆபரேஷன் சிந்தூர் தேச பாதுகாப்பை வலியுறுத்தும் சிறந்த பாடம்: ஐ.ஐ.டி. இயக்குநர் பெருமிதம்

சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை சிறந்த தலைமை அளித்துள்ள சக்திவாய்ந்த பாடம் என்று சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தின் இயக்குநர் காமகோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதுதொடர்பான வீடியோக்கள், போட்டோக்களை ராணுவம் வெளியிட்டது. ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்தன.
இந் நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை சிறந்த தலைமை அளித்துள்ள சக்திவாய்ந்த பாடம் என்று ஐ.ஐ.டி., கல்வி நிறுவன இயக்குநர் காமகோடி புகழாரம் சூட்டி உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் சிந்தூர் நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும், நாட்டுமக்கள், மாணவர்கள் மற்றும் எதிர்காலத் தலைவர்களாகிய நமக்கு தரும் ஒரு பாடம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் காமகோடி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; சிந்தூர் நடவடிக்கை என்பது தேசிய பாதுகாப்பை வலியுறுத்துவது மட்டுமல்ல, இது தலைமைத்துவம், தொழில்நுட்ப தயார்நிலை, மூலோபாய சிந்தனை மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றில் ஒரு சக்திவாய்ந்த பாடமாகும்.
உண்மையான பலம் அதிகாரத்தில் மட்டுமல்ல, சரியான நேரத்தில் நடவடிக்கை, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் மற்றும் கூட்டு முயற்சியிலும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது.
இவ்வாறு அந்த பதிவில் காமகோடி கூறியுள்ளார்.
இந்த பதிவுடன் வீடியோ ஒன்றையும் அவர் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் காமகோடி பேசியிருப்பதாவது;
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்து நாட்டை காப்பாற்றிய முப்படைகளுக்கும் நாம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம். ஆபரேஷன் சிந்தூர் பல பாடங்களை நமக்கு சொல்லித் தந்து இருக்கிறது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், விக்சித் பாரத் 2047 என சொல்லலாம். ஆபரேஷன் சிந்தூர் நமக்கு ஐந்து முக்கிய பண்புகளை சொல்லிக் கொடுத்து இருக்கிறது. தானியங்கி கருவிகள் மூலம் துல்லியமாக இலக்கை குறி பார்த்து தாக்குதல், வேகம், ரோபோடிக்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங்கின் முக்கியத்துவம், வான்வெளி பொறியியல், செயற்கைகோள் தகவல் பரிமாற்றம், செயற்கை நுண்ணறிவுத் திறன் போன்றவற்றின் செயல்பாட்டை நமக்குச் சொல்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கிய டிரோன்கள் இந்த செயல்திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பொறியியல் படிப்புகளை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ள வேண்டும்.
என்ன படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களின் விருப்பத்திற்கு பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்கவேண்டும். ஒவ்வொரு துறையும் எப்படி என்பது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் நாட்டை பாதுகாக்க மாணவர்களுக்கு தரப்படும் வாய்ப்பாகவும் இருக்கும்.
நாட்டுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் தரும் வகையிலான அனைத்து தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் வகையில் ஒன்றாக முன்னேறுவோம்.
இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

மேலும்
-
காங்கிரஸ் சிதம்பரத்துக்கு முட்டு கொடுக்கும் திருமாவளவன்
-
அ.தி.மு.க.,- பா.ஜ.,வுடன் ஜனசேனா கூட்டணி?
-
திரிணமுல் காங்., கூட்டத்தில் பங்கேற்க சீமானுக்கு அழைப்பு
-
'அப்படியெல்லாம் பேசக்கூடாது' சிதம்பரத்திற்கு தமிழக காங்., 'பூட்டு'
-
ரூ.6,200 கோடி பண மோசடி வழக்கு யூகோ வங்கி முன்னாள் தலைவர் கைது
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு