அ.தி.மு.க.,- பா.ஜ.,வுடன் ஜனசேனா கூட்டணி?

2



தமிழகத்தில் ஜனசேனா கட்சியை துவக்க, பவன் கல்யாண் முயற்சி மேற்கொண்டுள்ளார். தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, முன்னாள் செய்தித் தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை அழைத்து பேசியுள்ளார். அவரை தமிழக தலைவராக நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.


இதற்கிடையில், ஏற்கனவே தி.மு.க.,வில் இருந்தபோது, தன்னோடு நெருக்கமாக இருந்து, தற்போது அதிருப்தியில் இருக்கும் வட மாவட்ட தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்துச் சென்று, ஹைதராபாதில் பவன் கல்யாணை சந்திக்க வைத்துள்ளார்.


இந்நிலையில், வரும் 26ம் தேதி சென்னை வரும் பவன் கல்யாண், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக, பா.ஜ., சார்பில் நடத்தப்படவிருக்கும் கருத்தரங்கில் பேச உள்ளார். பின்னர், தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், ஜனசேனாவை சேர்ப்பது குறித்து பேச்சு நடத்த உள்ளார். அப்போது, இரு கட்சி தலைவர்கள் ரியாக்ஷனை வைத்து, அடுத்த கட்டம் குறித்து யோசிக்கவும் பவன் கல்யாண் முடிவெடுத்துள்ளார்.


ஒருவேளை, அ.தி.மு.க., - பா.ஜ., என இரு கட்சிகளும், 'கூட்டணியில் வேண்டுமானால் ஜனசேனாவை இணைத்துக் கொள்கிறோம்; சீட் கொடுக்க வாய்ப்பில்லை' என்று சொன்னால், அதையும் ஏற்று, கூட்டணியில் இணைவது எனவும் பவன் கல்யாண் முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.



- நமது நிருபர் -

Advertisement