ஏரியில் ரயில் பாதை அமைக்க பாண்டரவேடு விவசாயிகள் எதிர்ப்பு

பள்ளிப்பட்டு, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து, திண்டிவனம் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகா வழியாக அமையும் இந்த ரயில் பாதை, பள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு ஏரி மார்க்கமாகவும் அமைகிறது.

பாண்டரவேடு ஏரியில் அமைக்கப்படும் ரயில் பாதையில், பாலம் அமைக்க வேண்டும் என, உள்ளூர் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ரயில் பாதை அமைக்க ஏரியில் தொடர்ந்து மண் கொட்டப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், அதிருப்தி அடைந்த விவசாயிகள், நேற்று பாண்டரவேடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் பாண்டரவேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதட்டூர்பேட்டை போலீசார் 50க்கும் மேற்பட்டோர், சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். 'முறைப்படி ரயில் பாதை ஏற்படுத்தப்படும்' என, போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.

இதையேற்க மறுத்து, தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், பொதட்டூர்பேட்டை சமுதாயக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.

Advertisement