ஹைதராபாதில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் கைது

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாதில், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுதும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக, ஆந்திரா - தெலுங்கானா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி விசாரணை நடத்திய இரு மாநில போலீசார், ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில், சிராஜ் உர் ரெஹ்மான், 29, என்பவரை கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்படி, ஹைதராபாதைச் சேர்ந்த சையத் சமீர், 28, என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் தங்கியிருந்த வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் அமோனியா, சல்பர், அலுமினிய துாள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன், சிராஜ் உர் ரெஹ்மான், சையத் சமீர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், பாக்., பயங்கரவாத அமைப்புகளுடனும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாதின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த, இவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் பலர் கைதாகலாம் என, தெரிகிறது.

மேலும்
-
பிரதமரின் தொழில் பயிற்சி திட்டம்; வாய்ப்பளித்ததில் தமிழகம் முதலிடம்
-
பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி புகார் மனு
-
வோடபோன், ஏர்டெல் மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
-
சரமாரியாக சலுகைகளை வழங்கி தமிழக நிறுவனங்களை ஈர்க்க முயற்சி குஜராத், ஆந்திராவை சமாளிக்குமா அரசு?
-
மாரல் வித்யா மந்திர் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்
-
லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் சாதனை