காதலிக்க வற்புறுத்தி சிறுமியை வெட்டிய மாணவர்கள் கைது
வில்லிவாக்கம் :
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்த 17 வயது சிறுமியின் வீட்டிற்குள், முகமூடியுடன் நேற்று முன்தினம் இரவு புகுந்த நபர், பட்டா கத்தியால் சிறுமியின் தலையில் வெட்டினார். தடுக்க வந்த அவரது தாய்க்கும், கையில் வெட்டு விழுந்தது.
பின், அந்த நபர் வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபருடன் தப்பினார். அக்கம்பக்கத்தினர் தாயையும் மகளையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை வில்லிவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்களான கிேஷார், 19, தருண், 19, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சிறுமியை காதலிக்க வற்புறுத்தி, கிஷோர் டார்ச்சர் கொடுத்துள்ளார். சிறுமி மறுக்கவே, கிஷோரின் அறிவுறுத்தல்படி, அவரது நண்பர் தருண், சிறுமியின் வீட்டிற்கு சென்று, கத்தியால் வெட்டியது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், உடந்தையாக இருந்த மேலும் ஐந்து பேரிடம் விசாரிக்கின்றனர்.