மகளிர் உரிமை தொகை விண்ணப்ப வினியோக பணி: ரேஷன் ஊழியர்கள் எதிர்ப்பு

2

சென்னை : தமிழக அரசு, 2023 செப்டம்பர் முதல், 1.15 கோடி மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக, 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு, அரசு விதித்த நிபந்தனைக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


மாதம், 1,000 ரூபாய் கிடைக்காதவர்கள் தங்களுக்கு வழங்குமாறு தொடர்ந்து, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, விடுபட்டவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்க, அடுத்த மாதம் முதல் விண்ணப்ப படிவம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை, அனைத்து வீடுகளிலும் ரேஷன் ஊழியர்கள் வழங்கினர். ஆனால் ஒரு கடையில், 1,000 கார்டுகள் இருந்தால், 500 பேருக்கு கூட, உரிமைத் தொகை கிடைக்கவில்லை.


இதற்கு, ரேஷன் ஊழியர்கள் தான் காரணம் என்று கருதி, 1,000 ரூபாய் கிடைக்காதவர்கள், அவர்களுடன் தகராறு செய்தனர்; அடிக்கவும் வந்தனர். தற்போது, விடுபட்டவர்களுக்கு படிவம் வழங்கும் பணிக்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஏற்கனவே, படிவம் வழங்கியதற்கு ஊக்கத்தொகை வழங்காததுடன், கார்டுதாரர்கள் அடிக்க வந்தது தான் மிச்சம். எனவே, விடுபட்டவர்களுக்கு படிவம் வழங்கும் பணியில், ரேஷன் கடை ஊழியர்களை அரசு ஈடுபடுத்தக்கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement