அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு: விரைந்து விசாரிக்க தமிழக அரசு முறையீடு

புதுடில்லி : தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, விரைந்து பட்டியல் இடும்படி பதிவாளரிடம், தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
ஏற்க முடியாது
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில், கடந்த மார்ச்சில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர்.
'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், மாநில அரசின் அனுமதி பெறாமல் அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனை செல்லாது என அறிவிக்க கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் என்பது, நாட்டு மக்களுக்கு எதிரானது. எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்துகிறோம் என்பதை, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரிவிக்க அவசியம் இல்லை. அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி, கையெழுத்து வாங்கியதாக அரசு சொல்வதை ஏற்க முடியாது.
டாஸ்மாக் நிறுவன பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி, அமலாக்கத்துறை விசாரணையை தடுக்க அரசே முயற்சிப்பது துரதிருஷ்டமானது. அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை நடத்த, அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்பது அபத்தமான வாதம். இது, குற்றவியல் நீதி அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது.
எனவே, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
விடுமுறை
இதற்கிடையே, வரும், 23ம் தேதியிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு கோடைக்கால விடுமுறை துவங்குகிறது. அதற்கு முன்பாக, இந்த வழக்கை எப்படியாவது விசாரணைக்கு பட்டியலிட வைக்க, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, வழக்கை விரைந்து பட்டியலிடும்படி உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், நேற்று தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து இந்த மனு, வரும் 22ல் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.










மேலும்
-
கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
-
தி.மு.க., பிரமுகர் மீதான பாலியல் புகார்; விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!
-
நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கவனத்திற்கு: நேர்முகத்தேர்வு இன்றி 615 பணியிடங்கள் அறிவிப்பு
-
குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவியுங்கள்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி