'ஆதார்' தரவுகளை யாருடனும் பகிர முடியாது; ஐகோர்ட்டில் ஆணையம் திட்டவட்டம்

சென்னை: 'இறந்த நபரின் கைரேகையை, ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது சாத்தியமில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிலளித்துள்ளது.
இறந்து போன அடையாளம் தெரியாத நபர்களின் முகவரி உள்ளிட்ட விபரங்களை கண்டறிவதற்காக, அவர்களின், 'பயோமெட்ரிக்' விபரங்களை வழங்க, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டிவனம் டி.எஸ்.பி., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், யு.ஐ.டி.ஏ.ஐ., பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த வழக்கில், யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு சார்பில், அதன் பெங்களூரு மண்டல அலுவலக துணை இயக்குனர் ப்ரியா ஸ்ரீகுமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன் விபரம்:
நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவைகள் போன்றவற்றை, உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல் சட்ட பிரிவுகளின்படி, 2016ல், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உருவாக்கப்பட்டது. இது, ஒரு சட்டப்பூர்வ ஆணையம். இந்த ஆணையம் வாயிலாக, இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், 'ஆதார்' என பெயரிப்பட்ட, யு.ஐ.டி., எனும் ஒரு தனித்துவ அடையாளமாக, 12 எண்கள் வழங்கப்படுகின்றன.
ஆதார் எண்ணை வைத்து, தனியொரு நபரின் நடவடிக்கையை கண்காணிப்பது நோக்கம் அல்ல. சேகரிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட எந்தவொரு முக்கிய, 'பயோமெட்ரிக்' தகவலையும், எந்த காரணத்துக்காகவும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது; ஆதார் எண்கள் உருவாக்கம் மற்றும் அங்கீகாரம் தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும், அதைப் பயன்படுத்தக் கூடாது என, ஆதார் சட்டப்பிரிவு தெளிவாக கூறுகிறது.
எனவே, தனிப்பட்ட நபரின் தகவல்கள் பகிரப்படாது. உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், அந்த நபரின் கருத்தை கேட்ட பின், விபரங்கள் பகிரப்படும்.
அதுவும், தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக மட்டுமே. மத்திய அரசின் செயலர் பதவிக்கு குறையாத ஒரு அதிகாரியால் அல்லது அரசின் உத்தரவு வாயிலாக சிறப்பு அங்கீகாரம் பெற்றிருந்தால் மட்டுமே விபரங்கள் பகிரப்படும்.
தடயவியல் நோக்கங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, யு.ஐ.டி.ஏ.ஐ., கருவிழி 'ஸ்கேன்' கைரேகை தகவல்களை சேகரிப்பதில்லை. இறந்த போன ஒரு நபரின் கைரேகையை, 'ஆதார்' கைரேகை உடன் ஒப்பிட்டு, வழக்கில் மனுதாரர் கோரும் தகவல்களை வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது; இயலாதது.
யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பால் சட்டப்பூர்வ உத்தரவையும், தனியொருவரின் அடிப்படை உரிமையையும் மீறுவது இயலாதது என்பதால், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான உத்தரவு, ஜூன் 12க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.







மேலும்
-
கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
-
தி.மு.க., பிரமுகர் மீதான பாலியல் புகார்; விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!
-
நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கவனத்திற்கு: நேர்முகத்தேர்வு இன்றி 615 பணியிடங்கள் அறிவிப்பு
-
குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவியுங்கள்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி