ஆண்டிபட்டி - வத்தலகுண்டு மொபசல் பஸ் இயக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் இருந்து புள்ளிமான்கோம்பை வழியாக வத்தலகுண்டுக்கு மொபசல் பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புள்ளிமான்கோம்பை வழியாக வத்தலகுண்டு 32 கி.மீ., தூரம் உள்ளது. தேனி, உசிலம்பட்டி, பெரியகுளம், வத்தலகுண்டு டெப்போக்கள் மூலம் 6 டவுன் பஸ்கள் 25க்கும் மேற்பட்ட முறை இயக்கப்படுகிறது. வத்தலக்குண்டு மற்றும் ஆண்டிபட்டியை கடந்து பல மாவட்டங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் செல்கின்றன. ஆண்டிபட்டி - வத்தலகுண்டு வழித்தடத்தில் செல்லும் அனைத்து டவுன் பஸ் களிலும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த வழித்தடத்தில் மொபசல் பஸ் இயக்க பயணிகள் வலியுறுத்துகின்றனர். பயணிகள் கூறியதாவது: கட்டணமில்லா பஸ் பயணத்தை இப்பகுதியில் பெண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தொழில், வேலை, படிப்பு தொடர்பாக வத்தலகுண்டு - ஆண்டிபட்டி டவுன் பஸ்களில் அதிகம் பேர் பயணிக்கின்றனர். இந்த வழித்தடத்தில் மொபசல் பஸ் வசதி இல்லாததால் டவுன் பஸ்சை பயன்படுத்தும் கட்டாயம் பலருக்கும் உள்ளது. மொபசல் பேருந்தில் விரைவாக சென்று வர முடியும் என்பதால் பலரும் பயணிக்க தயாராக உள்ளனர். இந்த வழித்தடத்தில் அரசு, தனியார் மொபசல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement