தொடர் வெடிகுண்டு மிரட்டல் மாஜி அமைச்சர் கண்டனம்

புதுச்சேரி : வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபரை பிடிக்க முடியாதது காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது என, இந்திய கம்யூ., முன்னாள் அமைச்சர் விசுவநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு, ஜிப்மர் ஆகிய இடங்களுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை அனுப்பியது யார் என, கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த மிரட்டல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறையில் உளவு பிரிவு, சைபர் கிரைம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இருந்தும் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியவர் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை.

இது காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது. தமிழ்நாட்டில் இப்படி பலமுறை நடக்கும் போது உடனடியாக கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மிரட்டலுக்கு முன், கவர்னர் மாளிகைக்கு வழக்கமாக தபால் கொடுப்பவர்கள், அலுவலகம் உள்ளே சென்று தபால் கொடுத்தனர். தற்போது கவர்னர் மாளிகை வெளியே ஷெட் அமைத்து, அதில் பொதுமக்கள் தரும் புகார் மனுவை பெறுகின்றனர். இது மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக உள்ளது.

புதுச்சேரி அரசும், காவல்துறையும் இனியும் தாமதிக்காமல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement